டெல்லி, குஜராத், சேலம் பருப்பு வேகாது; தடுப்பு ஆட்டம் ஆட கூடாது அடிச்சு ஆடத்தான் பாக்கணும் முதல் அடி நம்ம அடிதான்! செந்தில் பாலாஜி சரவெடி

மேட்டுப்பாளையத்தில் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: திமுகவினர் வீடு, வீடாக ஒவ்வொரு வாக்காளராக நேரில் சென்று அவர்களிடம் அரசின் சாதனைகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து வாக்குகளாக மாற்ற வேண்டும். மகளிர் அணியை பொறுத்தவரை இந்த தேர்தலில் மகத்தான அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும்.

முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினால் கோவையில் உள்ள பத்து தொகுதிகளிலும் உதயசூரியன் வெற்றி பெறும். நிச்சயம் மேட்டுப்பாளையத்தில் நம்ம தான் ஜெயிக்கிறோம். முதல்வர் செய்த சாதனைகளை தாங்கள் செய்தது போல மாயத்தோற்றம் ஏற்படுத்துவதெல்லாம் இன்னும் சில தினங்களுக்கு தான். ஒருத்தர் இல்லை. இன்னும் பத்து பேர் பிறந்து வந்தாலும் அது முடியாது… அடிச்சு சொல்றேன்… உறுதியா சொல்றேன்… மேட்டுப்பாளையத்தில் நம்ம தான் ஜெயிக்கிறோம்.. எப்பவுமே நாம தடுப்பு ஆட்டம் ஆட கூடாது.

அடிச்சு ஆடத்தான் பாக்கணும். எடுத்து வைக்கும் முதல் அடி நம்ம அடியா இருக்க வேண்டும். தமிழ்நாட்டை காப்பாற்ற கூடிய தகுதி படைத்த ஒரே தலைவர் நமது முதல்வர் என்பதை தமிழக மக்கள் உறுதி செய்துள்ளனர். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, குஜராத்தில் இருந்து வந்தாலும் சரி, சேலத்தில் இருந்து வந்தாலும் சரி ஒன்னும் பருப்பு வேகாது. தமிழ்நாட்டுல அவங்களோட பருப்பு ஒருபோதும் வேகாது. நம் தமிழக முதல்வர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை அவர் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

கோவையில் கடந்த முறை பத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி வாய்ப்பு இழந்திருந்தாலும் கூட இது நமக்கு வாக்களிக்காத பகுதி என்று முதல்வர் ஒதுக்கி வைக்கவில்லை. கோவைக்கு தேவையான அனைத்து நிதிகளையும் கொடுத்து திட்டங்களையும் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக, சென்னையை தவிர்த்து முதல்வர் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் சுற்றுப்பயணம் செய்த மாவட்டத்தில் முதல் மாவட்டம் கோவை மாவட்டம்.

எனவே, யாரும் நமக்குள் பாகுபாடு இல்லாமல், கருத்து வேறுபாடு இல்லாமல் ஒருங்கிணைந்து பணியாற்றி கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் வென்று தமிழக முதல்வருக்கு சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கின்ற நகர, பேரூர், ஒன்றிய கழக செயலாளர்களுக்கு தேர்தல் முடிந்த பிறகு மிகச்சிறப்பான ஒரு அன்பு பரிசு இருக்கின்றது. அதனால் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும். அதற்காக உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: