கிடைக்குறதுல போன சேர வேண்டிய இடத்துக்கு போக முடியாது; நம்ம வண்டி பக்கத்துல வந்துடுச்சு… கொஞ்ச வெயிட் பண்ணுங்க… கூட்டணி குறித்து ராமதாஸ் சூசகம்

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் 2 இட ஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை நாம் தான் போராடி வென்றெடுத்தோம். சாதி, சமய, ஒற்றுமையுடன் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம்.

இன்னும் வெல்ல வேண்டியவை பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரி கல்வி, ஒரே மாதிரி தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி, நெரிசலற்ற போக்குவரத்திற்கான சாலைகள், பண வீக்கமற்ற பொருளாதார வளர்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.

உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை. உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன்.

நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம். நம் இலக்கை அடைந்து லட்சியத்தை வெல்வோம். எப்போதும் இணைந்தே இருப்போம். தொடர்ந்து உங்களோடு பேசுவேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

* இன்று அறிவிப்பா?
பாமக, வன்னியர் சங்கம், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் இன்று (26ம் தேதி) காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்து கலந்தாலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பின், 2026 சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ராமதாஸ் அறிவிக்கலாம் என தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Related Stories: