மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் கடந்தமுறை திமுக, அதிமுக தலா 5 தொகுதிகளை கைப்பற்றின. தற்போது திமுக அரசுத் திட்டங்களின் செயல்பாடுகளால் அடிமட்டத்தில் வசிக்கிற மக்களும் பலனடைவது, மக்கள் மனங்களில் பெரும் மாற்றத்தைத் தந்துள்ளது. இம்முறை 10 தொகுதிகளையும் கைப்பற்றும் எண்ணத்தில் திமுக கூட்டணி தேர்தல் பணியாற்றி வருகிறது. அதேநேரம் அதிமுக தரப்பில் பெரிய ஆர்வமின்றி தேர்தல் பணியாற்றி வருகின்றனர். நகரின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூவே இம்முறை தனக்கு வழக்கம்போல மேற்கு தொகுதி கிடைக்குமா? அல்லது வேறு தொகுதி தருவார்களா என்ற கடும் குழப்பத்தில் இருந்து வருகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 10 தேர்தல் வாக்குறுதிகளையும் அச்சடித்த நோட்டீசுடன், அதிமுக தொண்டர்கள் வீடு, வீடாக நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். ஒரு சிலர் அதையும் விநியோகிப்பதில்லை. மதுரை மாவட்டத்தின் முக்கிய அதிமுக நிர்வாகிகள் வீடுகளிலும் அச்சடித்த இந்த வாக்குறுதி நோட்டீஸ்கள் பீரோக்களில் அடைசலாக கிடக்கின்றன. ஏற்கனவே மதுரையில் அதிமுக மாவட்ட செயலாளர்களான மாஜிக்கள் செல்லூர் ராஜூ, ஆர்பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ என 3 பேரும் மூன்று அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
போதாதகுறைக்கு மருத்துவரணி நிர்வாகி டாக்டர் சரவணன் தன் பங்குக்கு ஒரு ஆதரவாளர் கூட்டத்தை வைத்து 4வது அணியாக வலம் வருகிறார். இந்த முறை 4 பேருமே தங்களுக்கான விருப்பத்தொகுதியை கேட்டுள்ளனர். இவர்களோடு, அதிமுகவின் சீனியர்கள் பலரும் சீட்டு கேட்டு தலைமையை நச்சரித்து வருகின்றனர். தாங்கள் விரும்பும் தொகுதியை தருகிறீர்களோ இல்லையோ? ஏதாவதொரு தொகுதியில் நிற்கிறோம். சீட்டு தாருங்கள் என கூறி வருகின்றனர்.
ஏற்கனவே மாஜி அமைச்சர்களான செல்லூர் ராஜூ, ஆர்பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா மூவரும், பாஜவுடன் கடந்த காலத்தில் கூட்டணி வைத்திருந்தபோது, போகுமிடமெல்லாம் பெரும்பகுதி மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகினர். இந்த இடங்களை எல்லாம் மதுரை அதிமுகவினர் பட்டியல் போட்டு வைத்திருப்பதோடு, அங்கு போகும்போது மட்டுமாவது பாஜ கட்சியினரை முழுமையாகத் தவிர்த்திடவும் திட்டமிட்டுள்ளனர். அதேநேரம் பாஜ வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்திற்கு சென்றாலும், பாதிப்பு ஏற்படுமே என்றும் யோசனையில் இறங்கியுள்ளனர். இதனால் சீட்டு கிடைத்தாலும் பாஜ மீதான அதிருப்தியால் நாம் பாதிக்கப்பட கூடாதே என்ற கவலை தூங்காநகர அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
* தேர்தலுக்கு அப்புறம் கூட்டணிக்கு ‘டாடா’: சங்கு ஊதும் எடப்பாடி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மதுரவாயல், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம், வானகரம் தனியார் மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் எடப்பாடி பேசியதாவது: ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் அறிவித்துள்ளேன். இந்த தேர்தலில் நமக்கு தான் ராஜ்யம். எப்போது தேர்தல் வரும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். யார் ஆட்சிக்கு வர வேண்டும், யார் வரக்கூடாது என்று மக்கள் முடிவு செய்வார்கள். அதிமுக வலிமையான கட்சி. சிறப்பான ஆட்சியை கொடுத்த கட்சி. அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இது உறுதி. நாங்கள் எப்போதும் யாருக்கும் அடிமையில்லை. மக்களுக்காக உழைக்கும் கட்சி. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். திறந்த மனதோடு நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். தேர்தலுக்காக கூட்டணி அமைத்து உள்ளோம். தேர்தலுக்கு பிறகு விருப்பப்பட்டால் கூட்டணியில் தொடரலாம். இல்லை என்றால் அவர்களுடைய கொள்கைப்படி செயல்படலாம். இவ்வாறு அவர் பேசினார்.
