வளர்ச்சி இருக்கும் மாநிலத்துல பாஜ இருக்காது; பாஜ இருந்தா அங்கு வளர்ச்சி இருக்காது: வன்முறை, வெறுப்பு, பிரிவினை எப்போது நிறுத்துவீர்கள்? இந்த தேர்தல் என்டிஏ vs தமிழ்நாடுதான்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

நாகர்கோவிலில் கன்கார்டியா மேல்நிலை பள்ளி மைதானத்தில் நேற்று குமரி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் ரூ.1785 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 3 லட்சத்து 12 ஆயிரத்து 82 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசினார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: குஜராத் மாநில மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியிருக்காங்க. ஆனா தமிழ்நாட்டுக்கு எதுவும் இல்லை. தேர்தல் வருதேன்னு பட்ஜெட்லயும் ஒண்ணுமில்ல. தமிழ்நாட்டுக்குப் போகப் போறோமேன்னு அமைச்சரவைக் கூட்டத்துலயும் நம்ம கோரிக்கை ஒண்ணுக்குக்கூட ஒப்புதல் தரல.

இந்தத் தேர்தல் என்பது தமிழ்நாடு வெர்சஸ் என்.டி.ஏ. தமிழ்நாடு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில இருந்து ஆளப்படணும். டெல்லியில இருந்து ஆளப்படக்கூடிய நிலை வரக்கூடாது. தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் தாழ்த்தி, வீழ்த்தணும்னு பா.ஜ நினைக்குது. ஏன்னா வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலத்துல பா.ஜ இருக்காது. பா.ஜ இருந்தா அங்க வளர்ச்சி இருக்காது. அண்மையில கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, இந்தியா முழுக்க கிறிஸ்தவர்கள் மேல தாக்குதல் நடத்தப்பட்டுச்சு. மகாராஷ்டிராவுல பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து.

மணிப்பூர் இன்னும் பற்றி எரியுது. அசாம்ல இன்னும் மோசம். அந்த மாநிலத்தினுடைய பா.ஜ முதலமைச்சர் தன் வகிக்கக்கூடிய பொறுப்பை மாண்பை மறந்து, முஸ்லிம்கள் மேல வெளியப்படையா வெறுப்பைக் கக்குறார். பீகார்ல துணை முதலமைச்சர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? பள்ளிக்கூடங்களுக்குப் பக்கத்துல இறைச்சிக் கடைகள் இருந்தா அகற்றுவோம்னு பேசியிருக்கிறார். நாம என்ன சாப்பிடணும்னு முடிவு பண்றதுக்கு இவங்க யாரு?
இப்படி ஒரு நிலையை தமிழ்நாட்டுலயும் கட்டவிழ்த்துவிடத்தான் அவங்க துடியா துடிக்கிறாங்க. ஆனா நம்ம திராவிட மாடல் அரசுல மத நல்லிணக்கமும் ஒற்றுமையும் பேணப்படுது.

மதமாற்றத் தடைச் சட்டம், சி.ஏ.ஏ ஆகியவற்றை எதிர்த்து சட்டமன்றத்துல தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். சிறுபான்மையினர் பாதுகாப்பாக இங்கே இருக்காங்க. பெரும்பான்மையினர் சகோதர உணர்வோடு இருக்காங்க. அனைவரும் சமமா நடத்தப்படுறாங்க. வரலாற்றிலேயே இல்லாத எண்ணிக்கையா 4000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செஞ்சிருக்கோம். இந்தப் பகுதியைச் சேர்ந்த நம்ம பால பிரஜாபதி அடிகளார் என்ன பேசியிருக்கிறார் என்றால், ‘நம்ம முதலமைச்சருக்கு ஜாதியும் இல்ல மதமும் இல்ல, மொழி இருக்கிறது, இனமான உணர்வு இருக்கிறது, இது ஒரு பொற்காலம்’னு பேசியிருக்கிறார். வள்ளலார் அன்பர்கள் பாராட்டுறாங்க. உண்மையான ஆன்மீகப் பெரியோர்கள் பாராட்டுறாங்க.

இதுதான் பா.ஜவுடைய கண்களை உறுத்திக்கிட்டே இருக்கு. நான் வெளிப்படையாவே பாஜவிடம் கேட்கிறேன். எப்போதான் நீங்க வன்முறையை விட்டு வளர்ச்சியைப் பத்தி பேசுவீங்க? எப்போதான் வெறுப்பையும் பிரிவினையும் விதைக்கிற முயற்சிகளை நிறுத்திட்டு, தமிழ்நாட்டுக்கு நல்ல விஷயம் பத்தி பேசப் போறீங்க? தமிழ்நாட்டைக் குறை சொல்ல உங்களுக்குத் தகுதி இருக்கா? தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிப் பயணத்துல ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம். தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட, வெல்வோம் ஒன்றாக. தமிழ்நாடு வெல்லட்டும். இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாடு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில இருந்து ஆளப்படணும். டெல்லியில இருந்து ஆளப்படக்கூடிய நிலை வரக்கூடாது.

* டப்பா இன்ஜினும்… அதிமுக மூழ்கும் கப்பலும்….
‘‘பாஜ டப்பா இன்ஜினை நம்பி அ.தி.மு.க. இருக்கு. அ.தி.மு.க. என்ற மூழ்கும் கப்பலை நம்பி, பா.ஜ.க. வருது! பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தா பூஜ்ஜியம்தான்! ராஜ்ஜியம் கிடைக்காது! நம்ம திராவிட மாடல் சூப்பர் பாஸ்ட் இன்ஜின். 11.19% இரட்டை இலக்க வளர்ச்சியோட யாராலும் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு அதிவேகமா முன்னாடி போயிட்டு இருக்கு. திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் மீண்டும் அமையும். இப்போ நாங்க செஞ்சிருக்கக்கூடிய சாதனைகள, எங்களுடைய செகண்ட் இன்னிங்ஸ நாங்கள் மிஞ்சுவோம்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* எவ்வளவு அதிகமா மோடி இங்க வர்றாரோ அந்த அளவுக்கு தோல்வி
‘சிலர் தேர்தல் நேரத்துல மட்டும் உங்களை வந்து வட்டமடிப்பாங்க. தேர்தல் நேரத்துல மட்டும் வருவாங்க. தேர்தல் சீசன் வந்துட்ட காரணத்தினால பிரதமர் மோடி அவர்களும் இனி அடிக்கடி தமிழ்நாடு பக்கம் வரப்போறார். ஏற்கனவே வர ஆரம்பிச்சுட்டாரு, இன்னும் வரப்போறாரு. அதை நினைச்சு அவருடைய கூட்டாளிகளே பயப்படுறாங்க. ஏன் தெரியுமா? எவ்வளவு அதிகமா பிரதமர் இங்க வர்றாரோ, அந்த அளவுக்குப் பெரிய வித்தியாசத்துல என்.டி.ஏ கூட்டணி தோல்வி அடையும். ஏன்னா தமிழ்நாட்டுக்கு ஒண்ணுமே செய்யல என்பது மக்களுக்கு ஞாபகம் வரும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* வெரைட்டி வெரைட்டியா வடை சுடுறாரு எடப்பாடி
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டுக்கு வர இருக்கக்கூடிய பிரதமர், நம்முடைய கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வாரா? தமிழ்நாட்டு மீனவர்களுக்காக எடுத்த நடவடிக்கை என்ன? இலங்கைக் கடற்படையால நம்ம மீனவர்கள் கைது செய்யப்படுவதோ, தாக்கப்படுவதோ எப்போ முடிவுக்கு வரும்? இவங்களுக்குக் கிடைச்ச சரியான ஆள்தான் இப்போ எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய பழனிச்சாமி அவர்கள். ஒருத்தர் நாட்டு மக்கள் எல்லோருக்கும், ஒவ்வொருத்தருக்கும் 15 லட்சம் ரூபாய் தருவேன்னு வட சுட்ட மாதிரி, பழனிச்சாமி அவர்களும் வாய்க்கு வந்தபடி வெரைட்டி வெரைட்டியா இப்போ வடை சுட்டுட்டு இருக்காரு. இந்த வடைகளை எல்லாம் மக்கள் நம்பத் தயாராக இல்லை’’ என்றார்.

* காணாமல் போகும் மீனவ குடும்பங்களுக்கு மாதம் ரூ.2000 புதிய சலுகைகளும் அறிவிப்பு
தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலமா, தற்போது மீனவர்கள் மற்றும் அவங்க குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரக்கூடிய கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் உயர்த்தி வழங்கப்படும். இதற்கான விரிவான அரசாணையும் விரைவில் வெளிவரும். கடல்ல மீன் பிடிக்கப் போகும்போது காணாமல் போகும் நேரங்களில், காப்பீடு உள்ளிட்ட நிவாரணங்கள் கிடைக்கக்கூடிய நாள் வரைக்கும், அந்த மீனவர் குடும்ப வாழ்வாதாரத்திற்கு மாதம் 2000 ரூபாய் உதவித்தொகையா மீனவர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் என்பது உட்பட 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

* சூரியனை தாண்டி பருந்தோ, கழுகோ பறந்த வரலாறு இல்லை: தமிழச்சி ‘ஃபயர்’
கோவில்பட்டியில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திமுக கல்வியாளர் அணி மாநில செயலாளர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி பேசியதாவது: ஒன்றிய அரசிடம் நமது உரிமைகளை கேட்டுப் பெறுகின்ற தமிழ்நாடு அவர்களது அச்சுறுத்தல்களுக்கு என்றும் தலைகுனியாது. இன்று முதல்வர் தமிழ்நாட்டை பெண்களின் நம்பிக்கை கோட்டையாக மாற்றியுள்ளார். எங்களுக்கு ஒரே போட்டி திமுக தான், திமுகவை வீழ்த்த தான் கட்சி ஆரம்பித்துள்ளோம் என்று வானத்தில் இருந்து குதித்த நட்சத்திரங்கள், நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் கூறி வருகின்றன. திமுகவை வீழ்த்துவது தான் எங்கள் இலக்கு என்கின்றனர். ஆனால் எந்தக் கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது. உதயசூரியனை தாண்டி பருந்தோ, கழுகோ பறந்ததாக வரலாறு கிடையாது. சூரியனின் கரங்கள் நிச்சயமாக சுட்டுப் பொசுக்கி விடும்’ என்றார்.

Related Stories: