சேத்துப்பட்டு, பிப்.21: சேத்துப்பட்டில் மத நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து தவக்காலம் மற்றும் ரமலான் நோன்பு தொடங்கியதை முன்னிட்டு மத நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. லூர்து அன்னை திருத்தலம் பாதிரியார் ஜான் ராபர்ட் மற்றும் சேத்துப்பட்டு ஜமாத் தலைவர் அஸமத்துல்லா ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், அனைத்து சமயங்களும் அன்பு, சகோதரத்துவம், மனிதநேயம் ஆகியவற்றை போதிப்பதாகவும், அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற உயர்ந்த எண்ணத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்தியாவின் பன்முகத்தன்மையை போற்றி பாதுகாப்போம் என நோன்பு நாளில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் நோன்பு மேற்கொண்டவர்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அருட்பணி எழிலரசன், பங்கு பேரவை உறுப்பினர்கள் ஏசுபாதம், பிரேம்குமார், அல்போன்ஸ், நாதன்குமார், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேலூர் மறைமாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழு செயலர் ஞானசேகரன் செய்திருந்தார்.
