தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு

சென்னை, பிப்.18: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைகால பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: தொழிற்துறைக்கு தேவையான திறன்மிகு பணியாளர்களை உருவாக்குவதற்காக, இதுவரை 41 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைத்திட ரூ.298 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தரமான வேலைவாய்ப்புகளைப் பெற்றிடத் தேவையான திறன்களை இளைஞர்களுக்கு வழங்கிட, 71 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ரூ.2,877 கோடியில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில், 38,62,919 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3,397 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 40 வயதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து, மருத்துவப் பரிசோதனை அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர் தம் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை மாதாந்திர பராமரிப்புத் தொகை, கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன. 2,000 தொழிலாளர்களுக்கு புதிய இருசக்கர மின் வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.20 ஆயிரம் மானியமாக வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 1,996 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: