திருச்செங்கோடு அருகே கை, கால்களை கட்டி மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை

*போலீசார் விசாரணை

திருச்செங்கோடு : திருச்செங்கோடு அருகே தனியாக வசித்து வந்த 83 வயது மூதாட்டியை அடித்துக் கொன்று நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தோக்கவாடி காளிவேலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது 2வது மனைவி ரத்தினாம்பாள் (83). மூத்த மனைவிக்கு ஒரு மகனும், ரத்தினாம்பாளுக்கு ஒரு மகன், மகளும் உள்ளனர்.

கணவன் இறந்து விட்ட நிலையில், ரத்தினாம்பாள் தனியாக வசித்து வந்தார். இவர் சில வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். மேலும், வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம்போல் வீட்டுக்கு பால் ஊற்ற செல்லும் சசிகுமார் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பூங்கோதை ஆகியோர் சென்று பார்த்தபோது, வீடு வெளிப்புறமாக தாழ் போடப்பட்டிருந்தது. இதனை கண்ட சசிகுமார் அருகில் உள்ள வீடுகளில் ரத்தினாம்பாள் குறித்து விசாரித்தபோது, எங்கு சென்றார் என தெரியவில்லை என கூறியுள்ளனர்.

இந்நிலையில், வாசலில் ரத்தக்கறை படிந்திருப்பதாக உறவினர்களுக்கு பூங்கோதை தகவல் தெரிவித்தார். இதன்பேரில், தோக்கவாடியில் தறிப்பட்டறை நடத்தி வரும் தனசேகரன் என்பவர் வந்து வீட்டின் தாழ்ப்பாளை திறந்து பார்த்துள்ளார்.

அங்கு, கட்டிலுக்கு அடியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ரத்தினாம்பாள் சடலமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். தகவலறிந்து ரத்தினாம்பாளின் மகனான, நல்லூர் கந்தம்பாளையத்தில் எண்ணெய் வியாபாரம் செய்து வரும் தங்கராஜ் மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், எஸ்பி விமலா தலைமையில் டிஎஸ்பிகள் கிருஷ்ணன், கௌதமன் மற்றும் திருச்செங்கோடு புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய், நடமாடும் தடய அறிவியல் குழுவினர் குவிக்கப்பட்டனர். ரத்தினாம்பாள் சடலமாக கிடந்த அறைக்கு பக்கத்து அறையில், மது பாட்டில்கள் கிடந்துள்ளது.

மேலும், கடுமையான ஆயுதத்தால் கழுத்து பகுதியில் குத்தப்பட்டிருந்தது. இதேபோல், பின் மண்டையிலும் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. தடய அறிவியல் நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை பதிவு செய்தனர். மோப்பநாய் சீமா துப்பு துலக்க விடப்பட்டது.

வீட்டின் அருகில் மோப்பம் பிடித்து, சுமார் ஒரு கி.மீ., தூரம் வரை ஓடிச் சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும், நடமாடும் தடய அறிவியல் துறையினர் ரத்தினாம்பாள் உடலில் இருந்த காயங்கள் மற்றும் அருகே கிடந்த பொருட்கள் ஆகியவற்றை சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

ரத்தினாம்பாள் தங்க தோடுகள் மற்றும் 3 பவுன் தங்க சங்கிலி அணிந்திருந்தார். அந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருந்தார் என்பது தெரியவில்லை. தனியாக இருந்த மூதாட்டியின் நகை, பணத்திற்காக ஆசைப்பட்டு யாராவது கொலை செய்தார்களா, முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டிற்கு யார் யார் வந்து செல்வர், வட்டிக்கு பணம் வாங்கியிருப்பவர்கள் குறித்த விவரங்களை உறவினர்கள் வட்டத்திலும் விசாரித்து வருகின்றனர். தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயங்கி கிடந்த வளர்ப்பு நாய்

கொலை செய்யப்பட்ட மூதாட்டி ரத்தினாம்பாள் ஒரு நாய் வளர்த்து வந்தார். காலையில் அந்த நாய் மயக்கத்தில் கிடந்தது. இதனால், ரத்தினாம்பாளுக்கு நன்கு தெரிந்தவர்கள் தான் வீடு புகுந்து இந்த கொலையை செய்திருக்க வேண்டுமென போலீசார் சந்தேகிக்கின்றனர். நாய் குரைத்தால், ரத்தினாம்பாள் எழுந்து விடுவார் என்ற பயத்தில் மயக்க பிஸ்கெட் தந்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இதன் மூலம் கொலையாளிகள் திட்டமிட்டு தயாராக வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

Related Stories: