உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கீழ மலையன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). கூல்டிரிங் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி முத்துச்செல்வி (21). இவர்களுக்கு கபிலேஷ் (2) உள்பட 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று மதியம் முத்துச்செல்வி கடையை கவனித்து கொண்டிருந்தார். கடை முன்பு குழந்தை கபிலேஷ் விளையாடி கொண்டிருந்தான். அப்போது கூல்டிரிங் குடிக்க வந்த ஒரு தம்பதி குழந்தையை கொஞ்சியபடி தூக்கி தாங்கள் வந்த பைக்கில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் திடீரென பைக்கை ஸ்டார்ட் செய்து குழந்தையுடன் சென்றுவிட்டனர். குழந்தை கடத்தப்பட்டதை அறிந்து பரிதவித்த முத்துச்செல்வி கதறியழுதபடி குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் கூறினார். போலீசார் விரைந்து செயல்பட்டு, காரைக்கால் அம்மையார் கோயிலில் பைக்கை நிறுத்தி வைத்து தொடர்ந்து அழுத குழந்தையை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த தம்பதியை மடக்கினர்.
விசாரணையில் அவர்கள் சென்னை பள்ளிக்கரணையில் ஹார்டுவேர் கடை நடத்தி வரும் லிங்கதுரை (35), மனைவி ஜெயந்தி (33) என்பது தெரிய வந்தது. திருமணமாகி 11 ஆண்டுகளாகியும் தம்பதியினருக்கு குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தம்பதியை கைது செய்த போலீசார், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட 20 நிமிடங்களில் குழந்தையை போலீசார் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
