கொடைக்கானல்: நடிகர் சூர்யாவின் ‘மாயாவி’ திரைப்படத்தில் நடித்தவர் துணை நடிகை விஷ்ணுப்பிரியா. இவரது தந்தை சூரிய நாராயணன் (73). இவர் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே சொந்தமாக பங்களா வைத்துள்ளார். இங்கு ஆறுமுகம், முரளி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பங்களாவின் அறைகள் உரிய அனுமதியின்றி சுற்றுலாப்பயணிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்பு இந்த பங்களாவில், சுற்றுலாப்பயணிகள் போல 5 பேர் வந்து தங்கியுள்ளனர்.
இவர்கள் நேற்று முன்தினம் இரவு, பங்களா ஊழியர்கள் ஆறுமுகம், முரளி ஆகியோரை தாக்கி துணியால் கட்டி போட்டுள்ளனர். பின்னர், சூரிய நாராயணனையும், இருக்கையில் அமர வைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் டேப்பால் சுற்றி கட்டியுள்ளனர். இதில் அவர் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, மோதிரம் மற்றும் அங்கிருந்த சிசிடிவி கேமரா, ஹார்டு டிஸ்கையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பங்களா ஊழியர் ஆறுமுகம், நீண்ட போராட்டத்திற்கு பிறகு கட்டை அவிழ்த்துக்கொண்டு வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். தகவலறிந்து வந்த கொடைக்கானல் போலீசார், சூரியநாராயணன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தேனி எஸ்பி சினேகப்பிரியா விசாரணை நடத்தினார். பங்களா ஊழியர்கள் ஆறுமுகம், முரளி ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துணை நடிகை விஷ்ணுப்பிரியாவின் காதலர், கடந்த 2018ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சூரிய நாராயணனும் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் கொல்லப்பட்டாரா அல்லது நகைக்காக கொல்லப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
