ஆக்ரா: உத்தரபிரதேசத்தில் வீட்டிற்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர். உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டம் அமன்பூர் பகுதியில் பாத்திரம் பற்றவைப்பு கடை நடத்தி வந்த ஷியாம்வீர் சிங் (50) என்பவரது வீடு நேற்று நீண்ட நேரமாகப் பூட்டிக் கிடந்தது. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து நேற்று மாலை அங்கு வந்த போலீசார், வெல்டிங் மெஷினை பயன்படுத்தி கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு ஷியாம்வீர் சிங், அவரது 46 வயது மனைவி ராம்ஸ்ரீ, 14 மற்றும் 12 வயதுடைய இரு மகள்கள், 10 வயது மகன் என மொத்தம் 5 உடல்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து காஸ்கஞ்ச் எஸ்பி அங்கிதா சர்மா கூறுகையில், ‘வீட்டின் இரு கதவுகளும் உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தன, வெளிநபர்கள் உள்ளே வந்ததற்கான தடயங்கள் இல்லை. மனைவியின் கழுத்தில் காயம் உள்ள நிலையில், முதற்கட்ட விசாரணையில் ஷியாம்வீர் மற்றவர்களைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. 5 உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.
