தொழிலதிபரை கொன்ற 6 பேருக்கு இரட்டை ஆயுள்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா கண்டகானப்பள்ளியைச் சேர்ந்தவர் லட்சுமிநாராயணன் (37). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 23.10.2017 அன்று அவரை மர்ம நபர்கள் வெளியே அழைத்து சென்றனர். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் தேன்கனிக்கோட்டை – பஞ்சப்பள்ளி சாலை உள்ள சம்பத் நகர் அருகே, சாலையோரம் லட்சுமிநாராயணன் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இந்த கொலை தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், லட்சுமி நாராயணன் தேன்கனிக்கோட்டை மாரசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவருக்கு ரூ.30 லட்சத்தை கடனாக கொடுத்திருந்தார். பின்னர், கொடுத்த பணத்தை கேட்டதால், மகேஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து லட்சுமிநாராயணனை காரில் கடத்தி சென்று கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மகேஷ்குமார், ராஜ்குமார், வெங்கடாசலபதி, தக்கட்டி கெம்பன், ஹரீஷ், சுரேஷ், கர்நாடக மாநிலம் ஆனேக்கல் சூரி ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் கெம்பன் வழக்கு விசாரணையின் போது இறந்து விட்டார். மற்ற 6 பேர் மீதான வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Stories: