புனே: மகாராஷ்டிரா துணை முதல்வர் மறைவு குறித்த விசாரணை அறிக்கை வரும் சனிக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்ராக இருந்த அஜித் பவார் மற்றும் நான்கு பேர் கடந்த ஜனவரி 28ம் தேதியன்று தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான லியர்ஜெட் ரக விமானத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விமான பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ஒன்றிய அரசு, வரும் 28ம் தேதியன்று முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இது தொடர்பாக ஒன்றிய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மோகோல் பேசுகையில், ‘விமான விபத்து குறித்து விசாரணை அமைப்புகள் மற்றும் விமான போக்குவரத்து இயக்குநரகம் இணைந்து தீவிரமாக விசாரித்து வருகின்றன. விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டறியப்பட்டு அதில் உள்ள தகவல்கள் வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வரும் சனிக்கிழமைக்குள் விபத்துக்கான சரியான காரணம் குறித்த முதற்கட்ட அறிக்கை வெளியாகும்’ என்றார்.
