சம்பாதிக்கும் திறன் இருந்தும் மனைவி வேலைக்கு போகாததால் சும்மா இருந்ததாக அர்த்தமில்லை: ஜீவனாம்ச வழக்கில் டெல்லி ஐகோர்ட் அதிரடி

 

புதுடெல்லி: ‘சம்பாதிக்கும் திறன் இருந்தும், மனைவி வேலைக்கு செல்லாததால் அவர் சும்மா உட்கார்ந்ததாக அர்த்தமில்லை’ என ஜீவனாம்ச வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கூறி உள்ளது. கடந்த 2012ல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், 2020ல் பிரிந்தனர். இதில், பிரிந்த மனைவி திறமையானவர், நன்கு படித்தவர். ஆனால் வேலை தேட விரும்பவில்லை என்ற அடிப்படையில் அவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க மறுத்து விட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தாலும் அந்த மனைவிக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: சம்பாதிக்காத மனைவி வீட்டில் சும்மா இருக்கிறார் என்று அர்த்தமல்ல. குடும்ப பங்களிப்பு குறித்த தவறான புரிதலை இது பிரதிபலிக்கிறது. வேலைக்கு செல்லாமல் இருப்பது சோம்பேறித்தனம் அல்ல. வீட்டில் இருக்கும் மனைவி தான் வேலைக்கு செல்லும் தனது துணை உற்சாகத்துடன் செயல்பட உழைக்கிறார். குடும்ப பொறப்புகளை கவனிக்கிறார், குழந்தைகளை வளர்க்கிறார். வீட்டை நிர்வகிக்கிறார். குடும்ப பாரத்தை சுமக்கிறார்.

ஆனால் அவரது பங்களிப்பு ஊதியம் பெறாமலும் அங்கீகரிக்கப்படாமலும் இருந்தாலும் அவற்றை அவர் செய்கிறார். எனவே, ஜீவனாம்சத்தை தீர்மானிக்கும் போது, வேலைக்கு செல்லாத மனைவியின் குடும்ப பங்களிப்பை புறக்கணிப்பது நியாயமற்றது. சம்பாதிக்கும் திறன் மட்டுமே ஜீவனாம்சத்தை மறுப்பதற்கான காரணமாக இருக்க முடியாது. ஒரு மனைவி வேலையில்லாமல் இருப்பதை சோம்பேறித்தனம் அல்லது வேண்டுமென்றே கணவனை சார்ந்திருப்பதாக கருத முடியாது. திருமணம் அல்லது குடும்பப் பொறுப்புகள் காரணமாக வேலையில் இருந்து விலகிய ஒரு பெண் பின்னர் அதே நிலை, சம்பளம் அல்லது தொழில்முறை நிலையில் மீண்டும் வேலையைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதி, குடும்ப வன்முறைக்கு எதிரான சட்டத்தின் கீழ் மனுதாரரான மனைவிக்கு ரூ.50,000 வழங்க உத்தரவிட்டது.

 

Related Stories: