புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் உள்ள அசோக் மண்டபத்திற்கு அருகில் உள்ள பிரமாண்ட திறந்த படிக்கட்டில் ராஜாஜி யின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி, இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கவர்னர் ஜெனரல் ஆவார். டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன், வடக்கு, தெற்கு பிளாக் மற்றும் இந்தியா கேட் உள்ளிட்ட பல வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களை கட்டிய கட்டிடக் கலைஞர் எட்வின் லுட்யன்சின் மார்பளவு சிலைக்கு மாற்றாக ராஜாஜியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, ராஜாஜி உத்சவ் ஜனாதிபதி மாளிகையில் கலாச்சார மையத்தில் கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக ராஜாஜி குறித்த கண்காட்சி இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை நடக்க உள்ளது. இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘நமது விதியை வடிவமைத்தவர்களை கவுரவிப்பதற்கும், காலனித்துவ மனநிலையின் எச்சங்களை அகற்றுவதற்கும் இந்தியாவின் உறுதியை பிரதிபலிக்கும் ஒரு பாராட்டத்தக்க முயற்சி இது. ராஜாஜி ஒரு உயர்ந்த அறிஞர். சுதந்திர போராட்ட வீரர். சிந்தனையாளர், நிர்வாகி. அவரது வாழ்க்கை நேர்மை, அறிவுத்திறன் மற்றும் தேசத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை உள்ளடக்கியது ’’ என வலியுறுத்தி உள்ளார்.
