புதுடெல்லி: இந்தியா தனது முதல் தீவிரவாத எதிர்ப்பு கொள்கையை நேற்று வெளியிட்டது. தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும், தடுப்பதற்கும் மற்றும் அதன் பரவலுக்கான காரணங்களை கையாள்வதற்கும் தீவிரவாத எதிர்ப்பு கொள்கையை சர்வதேச நாடுகள் வகுத்து வருகின்றன. அதன்படி, இந்தியா தனது முதல் தீவிரவாத எதிர்ப்பு கொள்கையான ‘பிரஹார்’யை நேற்று வெளியிட்டது. இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆவணத்தில், ‘உள்நாடு அல்லது வெளிநாடுகளில் இருந்து விடுக்கப்படும் தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான இந்த கொள்கை, தடுப்பு, பதில்கள், உள்திறன்களை ஒருங்கிணைத்தல், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி அடிப்படையிலான செயல்முறைகள், தீவிரவாதத்தை செயல்படுத்தும் நிலைமைகளை தணித்தல், தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கான சர்வதேச முயற்சிகளை ஒருங்கிணைத்தல், வடிவமைத்தல் மற்றும் முழு சமூக அணுகுமுறை மூலம் மீட்பு மற்றும் மீள்தன்மை ஆகிய 7 அம்சங்களை அடிப்படையாக கொண்டது’ என கூறப்பட்டுள்ளது.
இந்த கொள்கையில், பூஜ்ஜிய சகிப்புத்தன்மை, உளவுத்துறை தலைமையிலான தடுப்பு மற்றும் தீவிரவாத வன்முறையை சீர்குலைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பல அடுக்கு உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகள், அவர்களுக்கு நிதி உதவி செய்பவர்கள், ஆதரவாளர்கள், நிதி, ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பான புகலிடங்களை பெறுவதை தடுப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
