அதிமுக, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது: டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

 

புதுடெல்லி: அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை குறித்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சச்சின் தத்தா முன்பு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்போது இறுதி முடிவு எடுக்கப்படும் என்பது தொடர்பாக ஒரு குறிப்பிட்ட தேதி தெரிவிக்க இயலாத சூழல் உள்ளது. அதாவது தேர்தல் ஆணையத்தின் முன்பாக கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்திருந்த நிலையில், தற்போது எஸ்.ஐ.ஆர் பணிகள் மற்றும் சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்ட வேலைகள் நடந்து வருகிறது.

எனவே அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முன்பு உள்ள மனுக்கள் மீது முடிவெடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தை தெரிவிக்க முடியாது ஏனெனில் தற்போது நடைமுறை சிக்கல்கள் உள்ளது. எங்களால் தற்போது உறுதியான எந்த பதிலையும் கூற முடியாது என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் கூறியுள்ளார், அதனை இந்த விசாரணையில் பதிவு செய்கிறோம். மேலும் வழக்கிற்கு முன்னுரிமை அளித்து விசாரணை கொள்ளப்படும் என்பதை நீதிமன்றம் ஏற்கிறது என்று தெரிவித்த நீதிபதிகள், எந்தவித உத்தரவையும் பிறப்பிக்காமல் விசாரணையை மே மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதில் தேர்தல் ஆணையம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் இந்த நடவடிக்கையால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி, இரட்டை சின்னம் மற்றும் கொடி ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி தரப்பு பயன்படுத்த எந்தவித தடையும் கிடையாது என்று தெரியவந்துள்ளது.

 

Related Stories: