தேனி: தேனி அருகே மதுராபுரியில் நான்கு வழிச்சாலை சந்திப்பில் உள்ள ஹைமாஸ் விளக்கு எரியாததால் விபத்து அபாயம் நிலவுகிறது. தேனி மாவட்டம் காட்ரோடு துவங்கி லோயர் கேம்ப் வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் திண்டுக்கல்-குமுளி புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையானது தேவதானப்பட்டி பிரிவு, பெரியகுளம் பிரிவு, வடுகபட்டி பிரிவு, மதுராபுரி அருகே தேனி பிரிவு, வீரப்ப அய்யனார் கோயில் பிரிவு, பழனிசெட்டிபட்டி அருகே போடி விலக்கு, போடேந்திரபுரம் விலக்கு, வீரபாண்டி விலக்கு என பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை பிரிவுகள் உள்ள பகுதிகளில் வரட்டாறு, மதுராபுரி, வீரபாண்டி ஆகிய சாலை சந்திப்புகளில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய புறவழிச் சாலையில் பயணிக்கும் கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கவரி வசூலித்து வருகிறது. சுங்கவரி வசூலிக்கும் இத்துறை நிர்வாகமானது சாலை பராமரிப்பில் போதிய கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இச்சாலைகளில் இருபுறமும் முள்செடிகள் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலைகள் ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இப்புறவழிச் சாலையில், நகர இணைப்பு சாலை சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாக்களில் உள்ள ஹைமாஸ் விளக்குகளை பராமரிப்பதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தேனி அருகே மதுராபுரி சாலை சந்திப்பில் இருக்கும் ஹைமாஸ் விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து கும்மிருட்டாக காட்சியளிக்கிறது. இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை ஆணைய நிர்வாகம், விரைவில் சாலை சந்திப்புகளில் உள்ள ஹைமாஸ் விளக்குகளை முறையாக எரிய செய்யவும், சாலையோரங்களில் முள்செடிகளை முறையாக அப்புறப்படுத்தி சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
