சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சத்து 07 ஆயிரத்து 380 ஆகும். இதில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் பேர் இடம்பெற்றுள்ளனர். இறுதியாக, 74 லட்சத்து 7207 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார். தமிழகத்தில் கடந்த 2003 மற்றும் 2005ம் ஆண்டுகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
இந்நிலையில் 2025ம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன. நீக்கப்பட்ட 97.37 லட்சம் பெயர்களில், உயிரிழந்த வாக்காளர்கள் 26 லட்சத்து 95 ஆயிரத்து 672 பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் என கணக்கிடப்பட்டது.
இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் கோரி 27.85 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி கடந்த 10ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் எத்தனை வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்ற இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் 23ம் தேதி வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 1.1.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, 2026ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) 27.10.2025 முதல் 23.2.2026 வரை தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (நேற்று) வெளியிடப்பட்டுள்ளது. 27.10.2025 தேதியின் நிலவரப்படி, 6,41,14,587 வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். சிறப்பு தீவிர திருத்தம், 2026ன் கீழ் கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பிறகு, மொத்தம் 5,43,76,756 வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய வரைவு பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது, அதை தொடர்ந்து, 19.12.2025 முதல் 30.1.2026 வரையிலான ஏற்புரைகள் மற்றும் மறுரைப்புரைகளுக்கான காலத்தில், பார்ம் 6 படிவத்தில் 27,85,195 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 27,53,796 பேர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது.
இதேபோல், ஆட்சேபனை தெரிவித்து பார்ம் 7ல் 4,38,425 விண்ணப்பங்கள் வந்திருந்தது. இதில், 4,23,172 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். 27.53 லட்சம் தகுதியுள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 4.23 லட்சம் தகுதிபெறாத நபர்கள் நீக்கப்பட்டனர். அதன்படி, தகுதியுள்ள வாக்காளர்களை கொண்ட 2026ன் இறுதி வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 23.2.2026 (நேற்று) நிலவரப்படி தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சத்து 07 ஆயிரத்து 380 ஆக உள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும், பெண் வாக்காளர்கள் 2,89,60,838 பேர், மூன்றாம் பாலினம் 7,617 பேர் ஆகும். இதில் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம், மாற்றுத்திறனாளிகள் என குறிக்கப்பட்ட வாக்காளர்கள் 4.63 லட்சம் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் (85+) 3.99 லட்சம் பேர் உள்ளனர்.
தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்டுள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,62,621; பெண்கள் 2,74,254; மூன்றாம் பாலினத்தவர் 116). இதற்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடி சட்டமன்ற தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 4,28,772 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,09,662; பெண்கள் 2,19,035; மூன்றாம் பாலினத்தவர் 75).
தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட துறைமுகம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் வாக்காளர்கள் 1,16,896 உள்ளனர். (ஆண்கள் 58,221; பெண்கள் 58,620; மூன்றாம் பாலினத்தவர் 55). இதற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட எழும்பூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,34,879, (ஆண்கள் 65,677; பெண்கள் 69,149; மூன்றாம் பாலினத்தவர் 53).
வாக்காளர் பட்டியலினை, தலைமை தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பதிவு அலுவலரின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் செய்யலாம். முதல் மேல்முறையீட்டு தீர்ப்பில் அதிருப்தி அடைந்தால், மாவட்ட ஆட்சியரின் உத்தரவு வழங்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தலைமை தேர்தல் அதிகாரியிடம் இரண்டாவது மேல்முறையீடு தாக்கல் செய்யலாம்.
வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்து, தேவையானால் பெயர் சேர்க்க (படிவம்-6), திருத்தம் (படிவம்-8) அல்லது நீக்கம் (படிவம்-7) செய்வதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம். 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறையாக வாக்காளர்களாக பதிவு செய்தவர்களுக்கும், திருத்தங்களுக்கு விண்ணப்பித்த அல்லது தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்த ஏற்கனவே உள்ள வாக்காளர்களுக்கும், அவர்களின் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பு முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் வாக்காளர் அடையாள அட்டை (EPIC) வழங்கப்படும்.தொடர் திருத்தக்காலம், 23ம் தேதி (நேற்று) முதல் நடைமுறையில் உள்ளது.
1.1.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்த, ஆனால் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இல்லாத அனைத்து தகுதியுள்ள குடிமக்களும் பின்வரும் வழிகளில் விண்ணப்பிக்கலாம்:
* வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.
* இணையம் மூலமாக https://voters.eci.gov.in/ என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
* கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து “Voter Helpline App” செயலியை தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்கள் மாவட்ட தொடர்பு மையங்களை ‘1950’ என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 1800-4252-1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் மாநில தொடர்பு மையம் இயங்கி வருகின்றது. இந்த எண்ணிலும் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். அதன்படி, வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிக்கு முன் வெளியிடப்பட்ட 27.10.2025 நிலவரப்படி தமிழகத்தில் 6,41,14,587 வாக்காளர்கள் இருந்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் தமிழகத்தில் 5,43,76,756 வாக்காளர் இருந்தனர். அப்போது 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதை தொடர்ந்து தகுதியான வாக்காளர்களை பட்டியலில் மீண்டும் சேர்க்க 19.12.2025 முதல் 30.1.2026 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. இதில் 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்க விண்ணப்பித்தனர். அதில் 4,23,207 பேர் நீக்கப்பட்டனர். அதன்படி புதிதாக 23,29,793 லட்சம் பேர் மட்டுமே தகுதியுள்ளவர்களாக மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி தமிழகத்தில் தற்போது 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர். இறுதியாக தற்போது 74,07,207 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்த வாக்காளர்கள்
5,67,07,380
ஆண் வாக்காளர்கள்
2,77,38,925
பெண் வாக்காளர்கள்
2,89,60,838
மூன்றாம் பாலினம்
7,617
18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள்
12,51,000
மாற்றுத்தினாளிகள் வாக்காளர்கள்
4,63,000
85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள்
3,99,000
மாவட்ட வாரியாக வாக்காளர்கள் விவரம்
மாவட்டம் ஆண் பெண் மூன்றாம்
பாலினத்தவர் மொத்தம்
சென்னை 1365763 1464344 829 2830936
திருவள்ளூர் 1544710 1612090 613 3157413
காஞ்சிபுரம் 578080 613917 197 1192194
செங்கல்பட்டு 1104511 1155144 381 2260036
வேலூர் 549654 583769 164 1133587
கிருஷ்ணகிரி 776318 777458 264 1554040
தர்மபுரி 624647 615311 150 1240108
திருவண்ணாமலை 943727 975277 155 1919159
விழுப்புரம் 783288 803154 211 1586653
சேலம் 1370962 1384548 320 2755830
நாமக்கல் 635299 675452 200 1310951
ஈரோடு 838466 901574 182 1740222
நீலகிரி 261317 285791 25 547133
கோவை 1300889 1395396 528 2696813
திண்டுக்கல் 812937 858964 174 1672075
கரூர் 406027 439054 83 845164
திருச்சி 1031354 1094642 307 2126303
பெரம்பலூர் 271634 283466 31 555131
கடலூர் 991527 1023976 293 2015796
நாகப்பட்டினம் 259620 268298 29 527947
திருவாரூர் 480679 498919 54 979652
தஞ்சாவூர் 947278 1004012 155 1951445
புதுக்கோட்டை 641276 657562 69 1298907
சிவகங்கை 544035 566526 38 1110599
மதுரை 1208651 1258051 252 2466954
தேனி 502311 530887 175 1033373
விருதுநகர் 728539 768632 246 1497417
ராமநாதபுரம் 556321 566653 55 1123029
தூத்துக்குடி 671742 704689 193 1376624
திருநெல்வேலி 611601 641518 145 1253264
கன்னியாகுமரி 751016 759390 144 1510550
அரியலூர் 259234 263692 28 522954
திருப்பூர் 944178 1010853 252 1955283
கள்ளக்குறிச்சி 552101 557600 210 1109911
தென்காசி 618063 646180 168 1264411
திருப்பத்தூர் 449464 461996 139 911599
ராணிப்பேட்டை 461213 483377 111 944701
மயிலாடுதுறை 360493 368676 47 729216
மொத்தம் 2,77,38,925 2,89,60,838 7,617 5,67,07,380
