தேன்கனிக்கோட்டை, பிப்.19: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே க.வண்ணாத்திப்பட்டி அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (32). இவரது மனைவி வரலட்சுமி (27). இவர்களுக்கு 5 மற்றும் 4 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மாதேஷ் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் கூலி வேலைக்கு சென்று விட்டனர். இரண்டு குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது மாலையில் திடீரென வீட்டில் தீப்பிடித்தது எரிந்தது. இதைக் கண்ட குழந்தைகள் கூச்சலிட்டனர். அருகில் இருந்தவர்கள் குழந்தைகளை மீட்டு வெளியே வந்தனர். பின்னர், தீயை அணைக்க முயன்றனர். ஆனால், வீடு மளமவென தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள், பணம், ஒரு பவுன் தங்கம், துணிகள் என அனைத்தும் சாம்பல் ஆனது. இது குறித்து அஞ்செட்டி போலீசார், வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
