சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் இருந்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உழவர் நலத்துறை சார்பில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
* வேளாண்மை – உழவர் நலத் துறையின் சார்பில் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களை நகர்ப்புர நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 16 உழவர் அங்காடிகளை தொடங்கி வைத்து, 53 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், 6 துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள், 2 விதை சேமிப்பு கிடங்குகள், 4 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 100 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட ஒரு குளிர்பதனக் கிடங்கு, 2 ஒருங்கிணைந்த விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை வளாகங்கள், தோட்டக்கலைப் பட்டயப்படிப்பு மாணவர் விடுதி, வேளாண்மைப் பொறியியல் துறை விரிவாக்க மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
* தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில், நீதிக்கட்சி வரலாறு, தந்தை பெரியார் சிந்தனைத் தொகுப்பு, அறிஞர் அண்ணா சிந்தனைத் தொகுப்பு, திராவிட இயக்க பெண் சிந்தனையாளர்கள் தொகுப்பு, திராவிட இயக்கமும் சமூக பண்பாட்டு பொருளாதார மாற்றங்களும், திராவிட இயக்கச் சிறுகதைகள்-2 தொகுப்புகள் ஆகிய திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை வெளியிட்டார்.
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 100 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்ட ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 65 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நரம்பியல் பிரிவுக் கட்டடம், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 64 கோடியே 9 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள், சென்னை, கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் 40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒப்புயர்வு மையக் கட்டடம், சென்னை, இராயபுரம், அரசு RSRM மகப்பேறு மருத்துவமனையில் 31 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசரகால மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்திற்கான கூடுதல் கட்டடம் மற்றும் இரத்த வங்கி நவீன ரத்த கூறு பிரிப்பு அலகு, திருக்குவளை அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தாய்சேய் நலக் கட்டடம், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் 13 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
* உயர்கல்வித் துறை சார்பில், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் 542.02 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனை கட்டடங்கள், மகளிர் விடுதிக் கட்டடம், திறன்மிகு மையங்கள் போன்ற பல்வேறு கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார்.
மேலும், 555.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு கட்டப்படவுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், பல்நோக்கு அரங்குகள், விடுதிகள் மற்றும் இதர கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினர்.
* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், சென்னை மாவட்டம், கிண்டி தொழிற்பேட்டையில் தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனத்திற்காக (டான்சி) 175 கோடி ரூபாய் செலவில் 263 தொழிற்கூடங்கள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகம், 32.33 கோடி ரூபாய் செலவில் சேலம், நெய்காரப்பட்டியில் பட்டு நூல் குழுமம், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மகளிருக்கான நெசவுக் குழுமம், தேனி மாவட்டம் திம்மிநாயக்கன்பட்டியில் செயற்கைப் பட்டு குழுமம், சென்னை மாவட்டம் பூங்கா நகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் தங்கநகைக் குழுமங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரகம் மூலம் 16.99 கோடி ரூபாய் செலவில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கயிறு குழுமம், வேலூர் மாவட்டம் பென்னாத்தூரில் தேன் பதப்படுத்துதல் குழுமம் மற்றும் கரூர் மாவட்டம் – புகளூரில் கயிறு குழுமம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
* பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள 474 புதிய வீடுகள் மற்றும் கோயம்பத்தூர், திருவள்ளூர், நாமக்கல், இராமநாதபுரம், திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள 7 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 1 கோடியே 47 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட 7 தொழிற்கூடங்களை திறந்து வைத்தார்.
* சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மதுரை, தருமபுரி, கடலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் 200 மகளிர் தங்கும் வகையில், புதிதாக கட்டப்பட்டுள்ள 4 “தோழி” பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்.
* தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் பழம்பெரும் நடிகை திருமதி. எம் என் ராஜம் அவர்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினையும், மூத்த திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.பி. முத்துராமன் அவர்களுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
* மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 14 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் சென்னை உட்பட 20 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 105 விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
