மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர், சித்தாமூர், அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில் உள்ள 25 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.4.97 கோடி மதிப்பீட்டிலான 31 புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கு செங்கல்பட்டு கலெக்டர் சினேகா தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 8 ஊராட்சிகளில் புதிதாக 11 சுட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கூவத்தூர், திருவாதூர், செம்பூர், சிறுவங்குணம், பரமண்கேணி ஊராட்சிகளில் 5 புதிய நியாயவிலைக் கடை மற்றும் 2 புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் ரூ.85.50 லட்சம் மதிப்பீட்டிலும், தட்டாம்பட்டு ஊராட்சியில் புதிய இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடம் ரூ.34.00 லட்சம் மதிப்பீட்டிலும், கனிமவள நிதியின் கீழ் கடலூர் ஊராட்சியில் புதிதாக இரண்டு அங்கன்வாடி கட்டிடம் ரூ.33.10 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் 11 புதிய கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.
இதேபோல் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 8 ஊராட்சிகளில் புதிதாக 10 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்கான திறப்பு விழா நிகழ்ச்சி இந்தளூர் ஊராட்சியில் நடைபெற்றது. சூணாம்பேடு, இந்தளூர் ஊராட்சிகளில் புதிய 2 சமையலறை கட்டிடங்கள் ரூ.15.12 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் 10 புதிய கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் வைத்தார்கள்.
மேலும், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளில் புதிதாக 10 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பெரும்பேர்கண்டிகை, தொழுப்பேடு, விளாங்காடு ஊராட்சிகளில் 2 அங்கன்வாடி கட்டிடங்கள், 1 நியாயவிலைக் கடை கட்டிடங்கள் ரூ.46.46 லட்சம் மதிப்பீட்டிலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மாத்தூர், களத்தூர், சிறுதாமூர் ஊராட்சிகளில் 1 புதிய அங்கன்வாடி கட்டிடம் என மொத்தம் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் 10 புதிய கட்டிடங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். மேலும் நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதேவி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் த.செம்பருத்தி துர்கேஷ், ஒன்றியக் குழு பெருந்தலைவர்கள் கண்ணன், சாந்தி ராமச்சந்திரன், ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் கார்த்திகேயன், எம்எஸ் பாபு, சிற்றரசு, தம்பு, கோகுலக்கண்ணன், எழிலரசன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிக்காடு ஏழுமலை, ராஜேந்திரன், உசேன், அயலக அணி துணை அமைப்பாளர்கள் பாரதி பாபு, கதிரவன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை துணை அமைப்பாளர் சிவக்குமார், மாவட்ட கவுன்சிலர் வசந்தா கோகுல கண்ணன், கவுன்சிலர்கள் சாரதி, பொன்மலர் சிவக்குமார், இந்தளூர் தலைவர் மாலா சிவா, பெரும்பேர் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்யூர் தொகுதி செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
