அசாமில் ரூ.18,662 கோடி செலவில் நீருக்கடியில் நாட்டின் முதல் சாலை-ரயில் சுரங்கப்பாதை: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: அசாமில் ரூ.18,662 கோடி செலவில் நீருக்கடியில் நாட்டின் முதல் சாலை-ரயில் போக்குவரத்துக்கான இரட்டை குழாய் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை டெல்லியில் நேற்று கூடியது. இதில், ஸ்டார்ட் அப் இந்தியா 2.0 திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தியாவில் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க கடந்த 2016ல் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 500 ஆக இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சமாக அதிகரித்துள்ளது. திட்டத்தின் முதல் தவணை தொகை வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2ம் கட்டமாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் கீழ் இந்தியாவின் முதல் சாலை மற்றும் ரயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இத்திட்டத்தின் கீழ் அசாமில் உள்ள கோப்பூர் மற்றும் நுமாலிகர் இடையே ரூ.18,662 கோடியில் 34 கிமீ தூரத்திற்கு நீருக்கடியில் இரட்டைக் குழாய் மூலம் சாலை மற்றும் ரயில் போக்குவரத்துக்கான சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றின் கீழ் நாட்டின் முதல் நீருக்கடியிலான சுரங்கப்பாதை கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டத்தில், கடலுக்கு அடியில் முதல் சுரங்கப்பாதைக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து, அசாமில் நாட்டின் முதல் நீருக்கடியில் இரட்டை சுரங்கப்பாதை அமைய இருக்கிறது. இது உலகின் 2வது நீருக்கடியில் அமையும் சாலை-ரயில் போக்குவரத்து சுரங்கப்பாதையாக இருக்கும்.

இந்த சுரங்கப்பாதை போக்குவரத்தின் செயல்திறனை அதிகரித்து, தளவாடச் செலவைக் குறைத்து, பிராந்தியத்தில் சமூக-பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்’’ என்றார். நகர்ப்புற சவால் நிதி ஒதுக்கீடு: இந்திய நகரங்களை நவீன, நிலையான மற்றும் பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றுவது, நீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை மற்றும் நிலையான உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள நகர்ப்புற சவால் நிதி திட்டம் கடந்த 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்திற்காக ரூ.1 லட்சம் கோடி ஒன்றிய அமைச்சரவை ஒதுக்கி உள்ளது.

நொய்டா மெட்ரோ வழித்தடம் நீட்டிப்பு
* நொய்டா மெட்ரோ ரயில் திட்டத்தின் நொய்டா செக்டார் 142 முதல் தாவரவியல் பூங்கா வரை 8 நிலையங்களை கொண்ட 11.56 கிமீ நீட்டிப்பு வழிடத்தடத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
* மகாராஷ்டிராவின் காசாரா-மன்மாட், டெல்லி-அம்பாலா மற்றும் கர்நாடகாவின் பல்லாரி-ஹோசபேட்டை இடையே 3 மற்றும் 4வது வழித்தடம் உள்ளிட்ட பல்வழி ரயில் திட்டங்களுக்கு ரூ.18,509 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
* சேவா தீர்த்தம் எனும் புதிய கட்டிடத்திற்கு பிரதமர் அலுவலகம் மாற்றப்படுவதை ‘கடந்த கால மற்றும் எதிர்காலத்தின் சங்கமம்’ என்று விவரிக்கும் தீர்மானித்தையும் அமைச்சரவை நிறைவேற்றியது.

Related Stories: