நாகர்கோவில்: பெங்களூரு – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தை அதிகரிக்க வேண்டும். பெங்களூருவில் இருந்து இந்த ரயில் புறப்படும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தென்மாவட்ட பயணிகள் குறிப்பாக குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருந்து சேலம், ஓசூர், பெங்களூருக்கு மதுரை வழியாக தினசரி ரயில் வசதி இல்லாமல் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். கடந்த 2000ம் ஆண்டு முதல் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். பல ஆண்டு கடுமையான போராட்டத்திற்கு பின் தென்மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வே துறை நாகர்கோவிலிருந்து பெங்களூருக்கு செல்ல 2013-ம் ஆண்டு பிப்ரவரியில் ரயில் பட்ஜெட்டில் நாகர்கோவில் – பெங்களூர் வழித்தடத்தில் புதிய தினசரி ரயில் நாமக்கல் வழியாக அறிவிக்கப்பட்டது.
பட்ஜெட் அறிவிப்பு தொடர்ந்து அதே வருடம் ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ரயில் கால அட்டவணையில் இந்த தினசரி ரயில் இயங்கும் கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி பெங்களூரில் இந்த ரயிலை அப்போதைய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 2013-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் சென்னை – தஞ்சாவூர் தினசரி ரயில், , சென்னை – பழநி தினசரி ரயில், சென்னை – வேளாங்கண்ணி தினசரி லிங்க் ரயில், கோயம்புத்தூர் – மன்னார்குடி தினசரி ரயில், நாகர்கோவில் – பெங்களூர் தினசரி ரயில், பழநி – திருச்செந்தூர் தினசரி ரயில்கள் அறிவிக்கப்பட்டன.
அந்த வகையில் நாகர்கோவில் – பெங்களூரு ரயில் தான் தென் மாவட்டங்களுக்கு கடைசியாக அறிவிக்கப்பட்டு இயக்கப்படும், தினசரி முன் பதிவு வசதி உள்ள இரவு நேர ரயில் ஆகும். அதற்கு பிறகு அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்ட ரயில்கள் எல்லாம் வாராந்திர அல்லது வாரம் மூன்று முறை ரயில்கள் ஆகும். சமீபத்தில் அதிக கட்டணத்தில் வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் படியாக வந்தே பாரத் ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் தினசரி ரயில்கள் முன் பதிவு வசதியுடன் அறிவிப்பு பார்க்க முடியுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நாகர்கோவில் – பெங்களூர் ரயில் இயங்க தொடங்கி 12 வருடங்கள் ஆகி விட்டன. இந்த ரயில் தமிழகத்தில் உள்ள கடைசி மாவட்டம் குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி என 11 மாவட்டங்கள் வழியாக பயணித்து பெங்களூர் செல்லத்தக்க வகையில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள அதிக பகுதி பயணிகள் பயன்படும் படியாக பெங்களூருக்கு இயக்கப்படும் ரயில் ஆகும். ஆகையால் இந்த ரயிலுக்கு மற்ற ரயில்களை காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தென்மாவட்ட பயணிகள் தொடர்ந்து வைக்கப்படுகின்றது.
நாகர்கோவிலிருந்து பெங்களூருக்கு செல்லும் இந்த ரயில் பெங்களூருக்கு காலையில் 9.20 அல்லது 9.30க்கு சென்று சேர்கிறது. இவ்வாறு காலதாமதமாக செல்வதால் இந்த ரயிலில் செல்லும் பயணிகள் பள்ளி கல்லூரி, வேலை வாய்ப்பு என்று பல்வேறு பணிகள் நிமித்தம் செல்லும் பயணிகள் அரை நாள் விடுமுறை எடுக்க வேண்டியுள்ளது. மறு மார்க்கமாக இந்த ரயில் பெங்களூரில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படுகிறது. இவ்வாறு சீக்கிரம் புறப்படுவதால் அலுவலக பணிகளை முடித்து இந்த ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. பெங்களூருவில், ரயில் முனையம் மாற்றப்பட்டதால் முனைய இடநெருக்கடி பிரச்சனை இல்லை என்பதால் இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்வதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்பதை ரயில்வே அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆகவே இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்து பெங்களூரில் இருந்து மாலை 6.30 மணிக்கு பிறகு புறப்படுமாறும் கால அட்டவணை அமைத்தும் மறு மார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு பெங்களூருக்கு காலை 7மணிக்கு சென்று சேருமாறு கால அட்டவணை அமைத்து வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை கணிசமான அளவில் குறைத்து இயக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த ரயில் இயக்கப்பட்டு ஆண்டுகள் 12 உருண்டோடி விட்டன. ஆனால் இதுவரை இது போன்ற ஒரு தினசரி ரயில் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு இதுவரை அறிவித்து இயக்கப்படவில்லை.
கர்நாடகத்திலிருந்து (சென்னை தவிர) தமிழகத்தில் மைசூர் – தூத்துக்குடி தினசரி ரயில், மைசூர் – மைலாடுதுறை தினசரி ரயில், மதுரை – பெங்களூர் வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே உள்ளன. பெருகிவரும் போக்குவரத்து கருத்தில் கொண்டு பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டில் அதிக ரயில்கள் இயக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஆகும். பெங்களூரில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் ரயில்கள் சேலம், ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில்களும் நள்ளிரவு நேரங்களில் இந்த வழியாக செல்வதால் இந்த பகுதி மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
தமிழக பயணிகள் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக மாநிலத்தின் பெங்களூர், மைசூர், ஹப்ளி, சிமோகா, போன்ற பகுதிகளிலிருந்து தமிழக நகரங்களுக்கு அதிக ரயில்கள் இயக்க வேண்டும் திருச்சி – பெங்களூர் வழி விருத்தாச்சலம் தினசரி ரயில், ராமேஸ்வரம் – மைசூர் தினசரி ரயில், மதுரை – பெங்களூர் பகல் நேர இன்டர்சிட்டி அல்லது ஜனசதாப்தி தினசரி ரயில், செங்கோட்டை – பெங்களூர் தினசரி ரயில், புதுவை – பெங்களூர் தினசரி இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில், வேளாங்கண்ணி – பெங்களூர் தினசரி இரவு நேர ரயில், கன்னியாகுமரி – ஹப்ளி தினசரி ரயில் வழி மதுரை, பெங்களூர், மதுரை – சிமோகா தினசரி இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி – ஹப்ளி தினசரி இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில், கன்னியாகுமரி – மங்களூரு (வழி சேலம், பெங்களூரு) இது போன்ற பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளன. இவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கை ஆகும்.
