திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே கொசவப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். புனித அந்தோனியார் கோயில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். கொசப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு அடுத்த ஆண்டு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஊர் பொதுமக்கள் சார்பில், உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் பிரார்த்தனை செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில், முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. போட்டி வழக்கத்தின்படி அதனை யாரும் பிடிக்கவில்லை. இந்த போட்டியைக் காண சுற்றுப்புற ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்துள்ளனர்.
