ஆரணி, பிப்.5: ஆரணி அருகே மொபட்டில் சென்ற பெண்ணை சரமாரி தாக்கி 7 சவரன் தாலி செயினை பறித்து சென்ற பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். ஆரணி அடுத்த சேவூர் பகுதியில் உள்ள இபிநகர் 2வது பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி ஜெயலட்சுமி(45). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். அதன்பின்னர், ஜெயலட்சுமி அவரது கணவரிடம் விவாகரத்து பெற்று, 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது மகனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஜெயலட்சுமி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ஆரணி டவுன் ஆரணிப்பாளையம் பகுதியில் உள்ள கோயிலுக்கு மொபட்டில் சென்றுள்ளார். அங்கு, சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, 8 மணி அளவில் ஆரணியில் இருந்து சேவூரில் உள்ள அவரது வீட்டிற்கு ெமாபட்டில் வந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் ஜெயலட்சுமியை பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில், ஜெயலட்சுமி அவரது வீட்டின் அருகே சென்றபோது, திடீரென பைக் ஆசாமிகள் அவர் மீது பைக்கை மோதியுள்ளனர். மேலும் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தாலி செயினை அறுக்க முயன்றதால், அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி தாலி செயினை இறுக்கி பிடித்து கொண்டு தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மர்ம ஆசாமிகள் இருவரும் சேர்ந்து ஜெயலட்சுமியை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டனர். பின்னர் அவர் அணிந்திருந்த 3 சவரன் தாலியை விட்டுவிட்டு, 7 சவரன் செயினை அறுத்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து, ஜெயலட்சுமி நேற்று ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவுசெய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். ஆரணியில் மொபட்டில் சென்ற பெண்ணை தாக்கி 7 சவரன் செயின் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
