அக்னிவீரர் ஆட்சேர்ப்பு முகாம் நள்ளிரவு முதல் தொடங்கியது 10 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரம் பேர் பங்கேற்பு காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில்

வேலூர், பிப்.5: காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக்னிவீரர் ஆட்சேர்ப்பு முகாம் நள்ளிரவு முதல் தொடங்க உள்ளது. இதில் 10 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். அக்னிபாத் திட்டத்தின் கீழ், இந்திய ராணுவத்திற்கான அக்னிவீர் (அக்னி வீரர்கள்) ஆள்சேர்ப்பு முகாம் ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தமிழ்நாட்டில் ராணுவத்தில் சேர்வதற்கான முகாம், வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கி உள்ளது. இந்த முகாம் வருகிற 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்க்-ஸ்டோர் கீப்பர், அக்னிவீர் டிரேட்ஸ்மேன், அக்னிவீர் ஜிடி, கிளர்க் எஸ்.கே.டி.டி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான ஆட்சேர்ப்பு இந்த முகாமில் நடைபெறுகிறது. இந்த முகாமில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உட்பட 10 வட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ராணுவ ஆட்சேர்ப்பு சார்பில் ஆட்சேர்ப்பு முகாம் மாவட்ட விளையாட்டு வளாகம் காட்பாடியில் நள்ளிரவு தொடங்கி வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. நள்ளிரவு 12.30 மணி முதல் இன்று காலை 10 மணி வரை நடக்கிறது. இதில் 10 வட மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஆயிரம் வீதம் தேர்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் காட்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் 8 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 80 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் காலை 9 மணி முதல் சோதனைகள் முடியும் வரை ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 10 கான்ஸ்டபிள்கள் ஒவ்வொரு நாளும் பணியில் ஈடுபடுகிறார்கள். மைதானத்திற்குள் உள்ள சுற்றுச்சுவர்களுக்கு 20 எண்ணிக்கையிலான போலீஸ் தடுப்புகள் மற்றும் ஓடுபாதையின் முடிவு கோட்டில் நான்கு நகரக்கூடிய தடுப்புகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வர்களுக்கு குடிநீர் வசதி, மொபைல் கழிப்பறைகள், தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் தீ அணைப்பானுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தில் போதுமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி அட்டைகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படவுள்ளன. இந்த ஆட்சேர்ப்பு முற்றிலும் திறமையை அடிப்படையாகக் கொண்டது என்பதால் விண்ணப்பதாரர்கள், மோசடி செய்யும் ஏஜென்ட்டுகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: