வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.70 லட்சம் மோசடி ராணிப்பேட்டை ஆசாமி மீது வேலூர் பெண் புகார் ஆம்பூரை சேர்ந்த நண்பனுக்கு

வேலூர், ஜன.29: ஆம்பூரை சேர்ந்த நண்பனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.70 லட்சம் மோசடி செய்ததாக, ராணிப்பேட்டை ஆசாமி மீது வேலூரை பெண் புகார் அளித்தார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்வு கூட்டம் ஏடிஎஸ்பி அண்ணாதுரை மற்றும் குற்றப்பிரிவு ஆவண காப்பக டிஎஸ்பி இருதயராஜ் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்த ஒரு பெண் அளித்த மனுவில், ‘ஆம்பூரை சேர்ந்த எனது நண்பனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதற்காக, எனது பள்ளிக்கால நண்பர் ஒருவர், ராணிப்பேட்டையை சேர்ந்தவரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவரை நான் நேரில் சந்தித்தபோது எனது நண்பனை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறினார். எனக்கு வெளிநாட்டில் நிறைய நண்பர்களை தெரியும், கம்பெனிகளை தெரியும் என்று கூறினார்.

இதனை நம்பி நான் ரூ.90 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக ஜி.பே மூலம் ரூ.2.70 லட்சம் வரை அனுப்பி வைத்தேன். அவர் என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு நான்கு மாதங்களாகியும் எந்த தகவலும் கொடுக்கவில்லை. வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் நானும் எனது நண்பரும் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டோம். அதற்கு அவர் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது. நீ எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் அளித்துக்கொள். எனக்கு எந்த பயமும் இல்லை என்று கூறிவிட்டு, சிங்கப்பூர் சென்று விட்டார். அதன் பிறகு அவரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுதொடர்பாக அவரது மனைவியிடம் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டபோது, என்னால் பணத்தை கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். எனவே எனது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: