தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வேலூர் போக்சோ கோர்ட் உத்தரவு சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய

வேலூர், ஜன.24: வேலூர் அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட் உத்தரவிட்டது. வேலூர் அடுத்த ஊசூர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார்(26), தொழிலாளி. இவருக்கு அப்பகுதியில் 10ம் வகுப்பு தோல்வியடைந்து வீட்டில் இருந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், கர்ப்பமடைந்த சிறுமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, சிறுமிக்கு 16 வயது என்பதை உறுதி செய்த மருத்துவர்கள், உடனடியாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில், அரியூர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் உதயகுமார் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

Related Stories: