வேலூர், ஜன.29: சிறை நிர்வாகம் மற்றும் சீர்திருத்த பயிற்சி மையம் ஆப்கா சார்பில், 3 மாநில பெண் சிறை அதிகாரிகளுக்கு வாழ்க்கை முறை மேலாண்மை தொடர்பான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. அகாடமி ஆப் பிரிசன்ஸ் மற்றும் கரெக்ஷனல் அட்மினிஸ்ட்ரேஷன் எனப்படும் சிறை நிர்வாகம் மற்றும் சீர்திருத்த பயிற்சி மையம் (ஆப்கா) மற்றும் வேலூர் ஆக்சீலியம் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகத்துறை இணைந்து ‘லைப் ஸ்டைல் மேனேஜ்மென்ட்’ என்ற வாழ்க்கைமுறை மேலாண்மை என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சித் திட்டத்தை 28-01-2026 முதல் 30-01-2026 வரை ஆப்கா மையத்தில் நடத்துகின்றன.
இத்திட்டத்தின் கீழ் திட்டம் சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்சார் நலனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வேலை, வாழ்க்கை சமநிலை, மன அழுத்த மேலாண்மை, உடல் ஆரோக்கியம் மற்றும் நேர்மறை சிந்தனை போன்ற தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களை சேர்ந்த 14 பெண் சிறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இப்பயிற்சி முகாமை நேற்று காலை வேலூர் ஆப்கா துணை இயக்குனர் கோவிந்தராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பயிற்சியை ஆப்கா இயக்குனர் பிரதீப் ஒருங்கிணைத்து பேசும்போது, ‘சிறைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் தங்கள் பணியின்போது பல்வேறு அழுத்தங்களை சந்திக்கின்றனர். இப்பயிற்சியின் மூலம் மனஅழுத்தம், உடல்நலன் சார்ந்த பல்வேறு கருத்துக்கள் இம்முகாமில் அவர்களுக்கு கிடைக்கும்’ என்றார்.
ஆக்சீலியம் மகளிர் கல்லூரி வணிக நிர்வாகத்துறை தலைவர் மற்றும் உதவி பேராசிரியர் பியூலா சுரேஷ் பயிற்சியை தொடங்கி வைத்து சிறைத்துறை அலுவலர்களின் உணவு மேலாண்மை, உடல் மற்றும் மனநலன் மேலாண்மை குறித்து விளக்கினார். ஆப்கா பேராசிரியர் மதன் நன்றி கூறினார். இப்பயிற்சியில் சிறைத்துறை அலுவலர்களுக்கு தொழில்ரீதியான மன அழுத்தத்தை குறைப்பதற்கும், ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும், நடைமுறை செயல்பாடுகளை கொண்டு அவர்களின் நலனை பேணும் வகையில், பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் கருத்துக்களை வழங்குகின்றனர்.
