சிறுத்தைகள் தாக்கி 4 பசு மாடுகள் படுகாயம் கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை பேரணாம்பட்டு அருகே தொடர் அட்டகாசம்

பேரணாம்பட்டு, ஜன.28: பேரணாம்பட்டு அருகே தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தைகள் தாக்கியதில் நான்கு பசு மாடுகள் படுகாயம் அடைந்தது. எனவே சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சாரங்கல், பத்தலபல்லி, எருக்கம்பட்டு, கோட்டையூர், டிடி மோட்டூர், குண்டலபல்லி, போன்ற கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள வன விலங்குகள் உணவுகள் மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது விவசாய நிலங்களிலும், கிராமங்களிலும் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியும், கால் நடைகளையும் தாக்கி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. பேரணாம்பட்டு வனப்பகுதிகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் குட்டிகளுடன் சுற்றி திரிகின்றன என்று கிராம மக்கள் கூறுகின்றனர். இதில் நாளுக்கு நாள் சிறுத்தைகள் கால் நடைகளை தாக்கி அட்டகாசம் அதிகரித்து வருவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜா, தமிழ்மாறன் ஆகியோர் 20க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று வருவது வழக்கம். நேற்று ராஜாவின் பசு மாடு ஒன்றை இரண்டு சிறுத்தைகள் தாக்கி கடித்து கொண்டிருந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜா கத்தி கூச்சலிட்டு சிறுத்தைகளை விரட்டி அடித்தார். பின்பு படுகாயம் அடைந்த பசு மாட்டை வீட்டிற்கு ஓட்டி வந்து சிகிச்சை அளித்துள்ளார். மேலும் அதே பகுதியை சேர்ந்த தமிழ்மாறன் என்பவரின் மூன்று பசு மாடுகளின் முதுகு, வயிறு பகுதி போன்ற இடங்களில் கீறி உள்ளது. தகவலறிந்த பேரணாம்பட்டு வனத்துறையினர் சிறுத்தைகளால் தாக்கப்பட்ட பசு மாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாளுக்கு நாள் சிறுத்தைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஏதாவது உயிர் சேதங்கள் ஏற்படும் முன் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: