வேலூர், ஜன.29: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் அமைச்சுப்பணியாளர்கள் உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோருக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முன்னிலையில் தமிழகம் முழுவதும் நடக்கிறது. 2025-2026ம் ஆண்டிற்கான உத்தேச காலிப்பணியிட மதிப்பீட்டு அறிக்கையின்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4 பணியிடங்களுக்கான (நேர்காணல் அல்லாத பதவி) இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவிக்கு நேரடி நியமனத்திற்கு தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்கள் பெயர்பட்டியல் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய நியமனங்கள் செய்யப்படுவதற்கு முன்னதாக ஏற்கனவே பணியில் உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவியில் பணிபுரிவோரிடமிருந்து உடல்நிலை. குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களை தெரிவித்து விருப்பமாறுதல் கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் தொகுக்கப்பட்டு முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டு விடுபட்ட பணியாளர்கள் விவரம் மற்றும் பட்டியலிலுள்ள பணியாளர்களின் விவரங்களில் திருத்தம், நீக்கம் செய்யப்பட வேண்டிய விவரங்களை அனுப்பிட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, திருத்தம், மற்றும் நீக்கம் செய்யப்படவேண்டிய விவரங்களுடன் விடுபட்ட பணியாளர்களின் விவரங்களுடன் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்து கருத்துருக்கள் பெறப்பட்டன.இதையடுத்து மாறுதல் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களில், மாவட்டத்திற்குள் மாறுதல் கோரியுள்ளவர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர்கள் முன்னிலையில் ஜனவரி 29ம் தேதி(இன்று) ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடக்கிறது.
