வேலூர், ஜன.30: வேலூரில் இன்று 2ம் நிலை காவலர்களுக்கான, 2ம் கட்ட உடற்தகுதி தேர்வுக்கு 376 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மருத்துவ தேர்வு, அசல் மதிப்பெண் சான்று சரிபார்ப்பு பணிகள் நடக்கும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பாளர், மத்திய சிறை, கிளைச் சிறைகளில் சிறை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 9ம் தேதி நடந்தது. இத்தேர்வில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 970 ஆண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் கடந்த 27ம் தேதி உடற்தகுதி தேர்வு தொடங்கியது. இத்தேர்வு 2 கட்டங்களாக வரும் 30ம் தேதி இன்று வரை நடக்கிறது. இதில் உடற் தகுதித்தேர்வும், அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்புப்பணியும் நடந்தது.
இதில் முதல்கட்டமாக 27ம் தேதி நடந்த தேர்வில் 81 பேர் ஆப்சென்டான நிலையில் 400 விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் அளத்தல், மார்பளவு அளத்தல் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் 328 பேர் தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து நேற்றுமுன்தினம் 2வது நாளாக 490 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 421 பேர் உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். 69 பேர் ஆப்சென்டாகினர். இதில் 376 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான 2ம் கட்ட உடற்தகுதி தேர்வு 2 நாட்கள் நடக்கிறது. இந்நிலையில் நேற்று 2ம் கட்ட உடற்தகுதி தேர்வு தொடங்கியது. இதில் முதல்நாள் தேர்ச்சி பெற்ற 328 பேர் கலந்து கொண்டனர். இதில் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. இன்று 30ம் தேதியும் நடைபெறும் 2ம் கட்ட உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள 376 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. அடுத்தகட்டமாக மருத்துவ தேர்வு, அசல் சான்றிதழ் உறுதிதண்மை போன்றவை நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
