சென்னை:வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் ரூ.11.74 கோடி செலவில் தரைதளம் மற்றும் நான்கு தளங்களுடன் 21,850 சதுர அடி கட்டிட பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்த மையத்தின் தரைத்தளத்தில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள், வரவேற்பு அறை, மின்தூக்கி லாபி, 5 சிந்தாமணி நியாய விலை கடைகள் மற்றும் 1 அமுதம் நியாய விலை கடை என 6 நியாய விலை கடைகள், சாய்வுதளம், மின் தூக்கி (பயணிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர் வசதியுடன்) மற்றும் கழிப்பறை வசதிகள்; முதல் தளத்தில் பிஸியோதெரபி, உடற்பயிற்சி வசதிகள், எலெக்ட்ரோதெரபி அறைகள், அல்ட்ரா சவுண்ட் பிரிவு, உடற் சிகிச்சைக்கான வசதிகள், காத்திருப்பு அறை, மின்தூக்கி மற்றும் கழிப்பறை வசதிகள்;
இரண்டாம் தளத்தில் செயற்கை மூட்டு (கை/கால்) மையம், மின் தூக்கி மற்றும் கழிப்பறை வசதிகள்; மூன்றாம் தளத்தில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான அத்தியாவசிய வசதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், நோயாளிகள் சிகிச்சைக்கான வசதிகள் உள்ளது. நியாய விலை கடைகளை முதல்வர் திறந்து வைத்து, அப்பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
இதையடுத்து கொளத்தூர், ரெட்டேரி சந்திப்பு அருகில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.4.98 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள கொளத்தூர் ஏரிக்கரை பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த பூங்காவில் நடைபாதை வசதி, குழந்தைகள் விளையாடும் இடம், இசை பூங்கா, இருக்கை வசதிகள், அமரும் படிக்கட்டுகள், ஒப்பனை அறை, நவீன கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள், கண்காணிப்பு அறை, மின் அறை மற்றும் ஊஞ்சல் இருக்கைகள் போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், எஸ்.ஆர்.பி காலனி 8வது தெருவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் 310 திறந்தவெளி மின் மாற்றி கட்டமைப்புகளை, பாதுக்காப்பான வளைதள மின் மாற்றிகளாக மாற்றி அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரண பொருட்கள், மடிக்கணினிகள், பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை 248 பயனாளிகளுக்கு முதல்வர் வழங்கினார்.
