பண்ருட்டி அருகே அடுத்தடுத்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு

பண்ருட்டி, பிப். 4: தூத்துக்குடியில் இருந்து பண்ருட்டி நோக்கி நேற்று மாலை முந்திரி கொட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. பண்ருட்டி- கும்பகோணம் நெடுஞ்சாலையில், பணிக்கன்குப்பம் அடுத்த நரிக்குறவர் குடியிருப்பு என்ற இடத்தின் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக சென்று முன்னால் சென்ற பைக் மற்றும் டேங்கர் லாரி மீது மோதியது. இதில், டேங்கர் லாரி பண்ருட்டியில் இருந்து நெய்வேலிக்கு சென்ற அரசு பஸ் மீது மோதியது.

இதில் அரசு பஸ்சில் பயணம் செய்த நெய்வேலி பழனி(62), அக்கடவல்லி ஆனந்த்(42), பைக்கில் வந்த பண்ருட்டி அஸ்வின்குமார்(34), புருஷோத்தமன்(32) உள்பட 10 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 மற்றும் தனியார் ஆம்புலன்சில் ஏற்றி பண்ருட்டி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான பஸ், லாரிகள் சாலையில் நின்றதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுமையாக பாதித்தது. இதையடுத்து பண்ருட்டி, காடாம்புலியூர், புதுப்பேட்டை போலீசார், பொதுமக்கள் உதவியுடன் விபத்துக்குள்ளான பஸ், லாரிகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.

Related Stories: