கெங்கவல்லி, பிப்.4: ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி கிராமத்தில் ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக அளவீடு செய்ய சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பதாகவும், அதனை அளவீடு செய்து அப்பகுதியில் விளையாட்டு பூங்கா உள்ளிட்டவை அமைத்து தர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று, நில அளவீடு அலுவலர் முருகன், வருவாய் அலுவலர் பிரவீனா, விஏஓ பொன்னுசாமி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் அளவீடு பணிக்காக சென்றனர். அப்போது, அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், ஆத்தூர் ஊரக போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
