சேலம், ஜன.28: கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயின்று 23 தங்க பதக்கங்களை பெற்று சாதனை படைத்த நாமக்கல் மாணவன் அருணேஸ்வரன், சுற்றுலாத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கணக்குப்பிரிவில் எழுத்தராக இளங்கோ என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மகன் அருணேஸ்வரன், கடந்த 2018-2024 கல்வியாண்டில் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் இளங்கலை கால்நடை மருத்துவ படிப்பை பயின்றார்.
தொடர்ந்து கடந்த 24ம் தேதி நடந்த தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அருணேஸ்வரன் 23 தங்க பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தார். இதனையடுத்து நேற்று ேசலம் வந்த அவர், அஸ்தம்பட்டி பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவனை பாராட்டிய அமைச்சர், அரூர் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மூலம் ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கி ஊக்கப்படுத்தினார். அப்போது சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் செயலாட்சியர் பிரியா, தொழிலாளர் நல அலுவலர் தனராஜ், கணக்கு அலுவலர் முருகேசன் மற்றும் மாணவரின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.
