கெங்கவல்லி, ஜன.28: சேலம் மாவட்டம் ஆத்தூர் காவல் உட்கோட்ட பகுதியில் ஆத்தூர் டவுன், ஆத்தூர் ஊரகம், தலைவாசல், வீரகனூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி மற்றும் மல்லியகரை போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று மேற்கு மண்டல ஐஜி சரவணசுந்தர் ஆத்தூர் டவுன், மல்லியகரை போலீஸ் ஸ்டேஷன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஆவணங்கள், வருகை பதிவேடு, குற்ற சம்பவங்கள் உள்ள சிடி பைல், நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். மேலும், பணியில் இருந்த போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வருகின்ற அனைவரையும் மரியாதையாக நடத்திட வேண்டும்.
புகார்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குற்ற சம்பவங்களை நீதிமன்றத்துக்கு விரைவாக விசாரணைக்கு எடுத்துச் சென்று நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்திட வேண்டும் என போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.அதேபோல், மல்லியகரை போலீஸ் ஸ்டேஷன்களில் ஆய்வு செய்த ஐஜி, ஆவணங்கள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் தூய்மையாக இருக்கின்றதா, கைதிகள் வைக்கும் அறைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, ஆத்தூர் டிஎஸ்பி சத்யராஜ், ஆத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் அழகுராணி, தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.
