இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணி மும்முரம்

இடைப்பாடி, பிப்.4: இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி சுற்றுவட்டார பகுதிகளான குள்ளம்பட்டி, ஒடசக்கரை, செட்டிப்பட்டி, தேவூர், சென்ராயனூர், காவேரிப்பட்டி, புல்லா கவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது செழித்து வளர்ந்து நெல் அறுவடையில் விவசாயிகள், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போதிய ஆட்கள் இல்லாத நிலையில் இயந்திரம் மூலமாக அறுவடை பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் ஏக்கர் கணக்கில் நெல் அறுவடை செய்கிறோம். இதன் மூலம் வைக்கோல் தனியாகவும், நெல் தனியாகவும் பிரித்து மூட்டைகளை கட்டி வைக்கின்றோம். கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகளவில் விளைச்சல் உள்ளது. வயல்களிலே வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை புரிந்து, நெல்களை மூட்டை கட்டி மொத்தமாக விலை பேசி வாங்கி செல்கின்றனர் என்றனர்.

Related Stories: