சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்: 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

பெரியபாளையம், பிப்.4: சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பெரியபாளையம் அருகே, சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சாமி கோயில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக, 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். செவ்வாய்க்கிழமையான நேற்று சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோயிலுக்குள் வந்து சுமார் 4மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மூலவர் பாலசுப்ரமணியர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆறு வாரங்கள் தொடர்ச்சியாக வரும்போது மனதிற்கு நிறைவை தருவதாக, பூரிப்புடன் தெரிவித்தனர்.

Related Stories: