அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்த ஆவடி, திருத்தணியில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

திருத்தணி, மார்ச் 21: சட்டமன்ற தேர்தலில், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆவடி, திருத்தணியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ல் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற உள்ளது. திருத்தணி சட்டமன்ற தொகுதியில் 2.65 லட்சம் வாக்காளர்கள் 337 வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க உள்ளனர்.
இந்நிலையில், 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் 50க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு பேரணி நேற்று நடத்தினர். அப்போது, சித்தூர் சாலையில் கொடி அணிவகுப்பு பேரணியை ஏஎஸ்பி சுபம் திமான் தொடங்கி வைத்தார். பின்னர், ரயில் நிலையம், ம.பொ.சி சாலை, அரக்கோணம் சாலை உள்பட நகர முக்கிய வீதிகள் வழியாக கொடி அணிவகுப்பு பேரணி நடத்தி அச்சமின்றி வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆவடி: இதேபோல், ஆவடியில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஆவடி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அச்சமின்றி வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருந்து 43 பாட்டாலியன் கமாண்டர் பார்பின் போரா தலைமையில் 35க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் ஆவடி வந்தடைந்துள்ளனர். இதனிடையே, ஆவடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசாருடன் துணை ராணுவத்தினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். முத்தாப்புதுபேட்டை பஜாரில் துவங்கி பாலவேடு பகுதியில் நிறைவடைந்தது.

Related Stories: