கும்மிடிப்பூண்டி, மார்ச் 27: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில், மொத்தம், 344 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதற்கு தேவையான 412 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 447 விவிபேட் கருவிகள், நேற்று இரண்டு கன்டெய்னர் லாரிகளில் மூலம் கொண்டு வரப்பட்டது. கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள தனியார் பள்ளியில் ஏற்படுத்தப்பட்ட இரண்டு ஸ்ட்ராங் ரூம்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை சரி பார்க்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு ஸ்ட்ராங் ரூம்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும், ஸ்ட்ராங் ரூம்களின் மின் இணைப்பை துண்டித்தனர். சுழற்சி முறையில் 24 மணிநேரம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஸ்ட்ராங் ரூம்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது.
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் 337 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, திருத்தணி அரசு கல்லூரியில் ஸ்டராங் ரூமில் பாதுகாப்பாக வைக்க வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று கொண்டுவரப்பட்டது. திருத்தணி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கனிமொழி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 404 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாடு கருவிகள் மற்றும் 438 விவி பேட் இயந்திரங்கள் வந்தடைந்தது. அவற்றை ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கண்காணிக்கப்படும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். துணை தேர்தல் நடத்தும் அலுவலர் குமார், தேர்தல் துணை வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டில் இருந்து வாக்குப்பதிவிற்கு தேவையான இயந்திரங்கள் பொன்னேரிக்கு கொண்டு வரப்பட்டன. 327 வாக்குச்சாவடி மையங்களை கொண்ட பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு தேவையான 392 வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்களின் புகைப்படம், சின்னம் பொருத்தப்படவுள்ள 392 பேலட் இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் 425 வி.வி.பேட் இயந்திரம் உள்ளிட்டவை நேற்று பொன்னேரி மீன்வள கல்லூரி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன. பொன்னேரி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலையில், ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு பெட்டக அறையில் வாக்குப்பதிவிற்கான இயந்திரங்கள் அனைத்தும், அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டன. தொடர்ந்து, 24 மணிநேரம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 521 பூத்களுக்கான கண்ட்ரோல் யூனிட் பேலட் யூனிட் வி.வி.பேட் என மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து இரண்டு வாகனத்தில் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் ஒற்றை வாடை தெருவில் உள்ள உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர், மாதவரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பெருமாள் முன்னிலையில் மாதவரம் தொகுதிக்கப்பட்ட அனைத்து கட்சிகள் முன்னிலையில் வாகனத்தில் வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அறையில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு பின்னர் அறையையும் சீல் வைத்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளன.
