மாவட்ட முழுவதும் உரிய ஆவணம் இல்லாத ரூ.14.71 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினர் நடவடிக்கை

திருவள்ளூர், மார்ச் 21: திருவள்ளூர் மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி இரு கார்கள் உள்ளிட்டவற்றில் கொண்டு வரப்பட்ட ரூ.14.71 லட்சத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் – பெரும்புதுார் மாநில நெடுஞ்சாலையில் காட்டு கூட்டு ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த காரை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அதில், திருவள்ளூர் அடுத்த மப்பேடு, மேட்டுச்சேரி பகுதியை சேர்ந்த அருண் (40) என்பவர், உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ. 1.75 லட்சம் பணத்தை, திருவள்ளூர் தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்ட அலுவலருமான சு.ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். அவர், உரிய ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்து, பணத்தை பெற்றுச்செல்லுமாறு கூறி, அப்பணத்தை திருவள்ளூர் கருவூலத்தில் ஒப்படைத்தார்.

இதேபோல், பூந்தமல்லி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திருமழிசை குண்டுமேடு பகுதியில் வந்த டாடா நெக்ஸான் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது, காரில் சென்னை உள்ளகரம் பகுதியை சேரந்த ரமேஷ் (38) என்பவர், திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தார். அவரிடம் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ.3.05 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசன், தாசில்தார் உதயம் ஆகியரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பூந்தமல்லி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

 புழல்: இதனிடையே, மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜிஎன்டி சாலையில் தனியார் கல்லூரி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கார் ஒன்றை மடக்கி, சோதனை செய்ததில் ரூ.1.37 லட்சம் ரொக்கப்பணம் இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.37 லட்சத்தை பறிமுதல் செய்து, மாதவரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பெருமாளிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அனுராஸ் என்பவர், தமது சொகுசு காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் அதிகாரிகளால், அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் சமர்பித்து கருவூலத்தில் பணத்தை பெற்று கொள்ளலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் பெருமாள் தெரிவித்தார்.

 கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடியில், தனி தாசில்தார் பரமசிவம் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அமுலு(50) என்பவர் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் மேம்பாலம் அருகே, தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரதீப்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டு ஆண்டார்குப்பம் பகுதியில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி பைக்கில் வந்த விஜய்(26) என்பவரிடமிருந்து ரூ.3.15 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே பொம்மாஜிகுளம் மாநில எல்லை சோதனைச்சாவடியில், துணை தாசில்தார் ஜூலியட் விமலா தலைமையிலான, நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, காளஹஸ்தியில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்த சாய்ராஸ்மிதா(31) என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்தனர். இதனிடையே, பூவலம்பேடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் முனிபெஞ்சய்யா என்பவரிடம் ரூ.99 ஆயிரம், மாதர்பாக்கம் பகுதியில் பூர்ணிமா என்பவரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்தனர். இதேபோல், ஊத்துக்கோட்டை பாலவாக்கம் பகுதியில் ரூ.1.20 லட்சம் என மொத்தம் 8.54 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். பின்னர், கும்மிடிப்பூண்டு சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன் உத்தரவின் பேரில், தலைமையிடத்து துணை தாசில்தார் கனகவள்ளியிடம் பறிமுதல் செய்த பணத்தை ஒப்படைத்தனர். பின்னர், கும்மிடிப்பூண்டி சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: