சென்னை: 2025ம் ஆண்டுக்கான டெட் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது.
2025ம் ஆண்டுக்கான டெட் தகுதித் தேர்வு கடந்த நவம்பர் 15, 16ம் தேதிகளில் நடந்தது. இத்தேர்வுகளை சுமார் 4.25 லட்சம் பேர் எழுதினர். இதற்கிடையே மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற பொதுப் பிரிவினர் 60 சதவீதமும் (90), இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55 சதவீதமும் (82) எடுக்க வேண்டும். ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா மாநிலங்களை பின்பற்றி தமிழகத்திலும் இடஒதுக்கீடு பிரிவினருக்கு டெட் தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் வரை சமீபத்தில் குறைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் டெட் தேர்வு முடிவுகளை டிஆர்பி நேற்று முன்தினம் இரவு //trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிட்டது. முதல் தாள் தேர்வை 92,417 பேர் எழுதினர். இதில் 45,469 (49.20%) பேர் தேர்ச்சி பெற்றனர். அதேபோல், 2ம் தாள் தேர்வை 3 லட்சத்து 31,900 பேர் எழுதினர். இதில் ஒரு லட்சத்து 4604 (31.5%) பேர் தேர்ச்சி பெற்றனர். இதற்கு முந்தைய டெட் தேர்வுகளில் 10 முதல் 15 சதவீதம் வரையே தேர்ச்சி இருந்தது. ஆனால், இந்த முறை வினாத்தாள் வழக்கத்தைவிட எளிதாக இருந்ததுடன், தேர்ச்சி மதிப்பெண்களும் குறைக்கப்பட்டதால் டெட் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.
பணியிலுள்ள ஆசிரியர்களுக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டது. இதையடுத்து நவம்பரில் நடந்த டெட் தேர்வை தற்போது பணியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் எழுதினர். அவர்களில் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து 2026ம் ஆண்டுக்கான வருடாந்திர திட்டத்தின்படி, இந்தாண்டில் 2 முறை டெட் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. ஆசிரியர்கள் தங்களின் தேர்ச்சி சான்றிதழை நாளை (பிப்ரவரி 2) முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
