அரசு அலுவலகங்கள் மற்றும் குப்பை திருவிழாவில் சேகரிக்கப்பட்ட கழிவு மூலம் ரூ.4.30 கோடி வருவாய்

சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று, சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் தூய்மை இயக்கத் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. முதல்வர் உத்தரவின் பேரில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தூய்மையாக்க வேண்டும். குப்பை மேலாண்மை சரியாக மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக, தூய்மை இயக்கம் திட்டம் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மை இயக்கம் சார்பில் முதற்கட்டமாக, சென்னை தலைமைச் செயலகம் உள்பட மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகள், மின்னணு கழிவுகள், உலோகக் கழிவுகள், காகித கழிவுகள், கண்ணாடி கழிவுகள், பயன்படுத்த இயலாத மர தளவாடங்கள் போன்ற பல்வேறு வகையான கழிவுகளை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த 12ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்த குப்பைத் திருவிழாவின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. குப்பைத் திருவிழாவில் 13,400க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், 14,160 கழிவு ஒருங்கிணைப்பாளர்கள், 1.25 லட்சம் சுய உதவிக்குழு பெண்கள் பங்களிப்பின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1,411 டன் பிரிக்கப்பட்ட உலர் கழிவுகள் பெறப்பட்டு நிலத்திற்கு செல்லாமல் தடுக்கப்பட்டது. இதற்கு முன் 90,000க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் நடந்த கழிவு சேகரிப்பு இயக்கம் மூலமாக பெறப்பட்ட கழிவுகள் மற்றும் குப்பைத் திருவிழாவில் பெறப்பட்ட கழிவுகள் மூலமாக ரூ.4 கோடியே 30 லட்சத்திற்கும் மேல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: