சென்னை: சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் தாக்கியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் போக்சோ சட்ட விதிகளை பின்பற்றாத காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்துவதற்காக கடந்த நான்காம் தேதி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், சிறுமியின் பெற்றோர் உள்ளிட்டோரிடம் ஆரம்பக்கட்ட விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று கூறப்பட்டிருந்தது. இதை கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
