சென்னை: 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், கடந்த 29ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகளை வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். அதில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான ‘பொன்னியின் செல்வன்: 1’ படத்திற்காக சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு மாநில விருதை பெறுவதில் பெருமை கொள்கிறேன். இந்த அங்கீகாரத்திற்காக தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். விருது வென்ற மற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, ‘வடசென்னை’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருது பெறவுள்ள தனுஷ், சிறந்த இயக்குனருக்கான விருது பெறவுள்ள சுசீந்திரன் (மாவீரன் கிட்டு), மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்), யோகிபாபு, கருணாகரன் ஆகியோரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (வடசென்னை, கனா), தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ், பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தங்களது படங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மாநில விருதுக்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.
