சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அப்போது, அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் (2026-27) கூட்டம் வருகிற பிப்ரவரி 2வது அல்லது 3வது வாரம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற இருப்பதால் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 5ம் தேதி மதியம் 12 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் பங்கேற்க அனைத்து அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள் வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டு, இதுவரை செயல்படுத்தப்படாத அறிவிப்புகளை பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, தமிழக மக்கள் பயன்பாட்டுக்கான புதிய திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது.
