காந்தி-ஜீவா நினைவு அரங்கம் குன்றக்குடி அடிகளார் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

காரைக்குடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று சிவகங்கை மாவட்டத்துக்கு வந்தார். சிராவயலில் சுதந்திரப் போராட்டத்தின் போது காந்தியடிகள் – ஜீவா ஆகியோர் சந்தித்து பேசியதன் நினைவாக, ரூ.3.27 கோடியில் 0.20 ஹெக்டர் நிலத்தில் நினைவு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரங்கத்தில் மகாத்மா காந்தியடிகள் – தோழர் ஜீவானந்தம் பேசுவதுபோல வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. அரங்கத்தையும், சிலையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்து, அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் நினைவு அரங்கத்தை பார்வையிட்டார். அப்போது தோழர் ஜீவாவின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். ஜீவா அரங்கை தொடர்ந்து குன்றக்குடியில் ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு ஆளுயர திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் கொடுத்து வரவேற்றார். குன்றக்குடி அடிகளார் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு, குன்றக்குடி மடத்திற்கு சென்ற முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மடத்திற்குள் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அறைக்கு சென்று அவருடன் சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து காரைக்குடிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கழனிவாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீறுகவியரசர் முடியரசனார் சிலையை திறந்துவைத்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வீறுகவியரசர் முடியரசனார் சிலையின் முன்பு அமைச்சர்கள் மற்றும் முடியரசனார் குடும்பத்தினார் அனைவருடன் சேர்ந்து முதல்வர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

* காரல் மார்க்ஸ் சிலை சென்னையில் பிப்.6ல் திறப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் என்னிடத்தில் சில வருடங்களுக்கு முன்பு மாநிலச் செயலாளர் சண்முகம், காரல் மார்க்ஸிற்கு உடனடியாக சிலை வைக்க வேண்டும் என கோரினார். தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை மாநகரத்தில் வைக்க வேண்டும் என்றார். அதுவும் காரல் மார்க்ஸ் நூலகத்தில் தான் அவருடைய வாழ்வே அமைந்திருக்கிறது. அதனால் சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் உள்ள மியூசியத்தில் மார்க்சிற்கு சிலை அரசின் சார்பில் வரும் பிப். 6ம் தேதி திறந்து வைக்கப்பட இருக்கிறது” என்றார்.

Related Stories: