தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணி மேலும் 10 நாட்கள் அவகாசம்: தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு; தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிக்கு மேலும் பத்து நாட்கள் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடக்கும் எஸ்ஐஆர் பணி தொடர்பாக திமுக, கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜால்மால்யா பாக்ஷி ஆகியோர் அமர்வில் இந்த மனுக்கள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் என்.ஆர்.இளங்கோ,’தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது விடுபட்ட 1.16 கோடி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மேலும் எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது விடுபட்ட இன்னும் பெரும்பாலான வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்து வழங்க வேண்டும்’என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,’ தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்க பட்டியல் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து அடுத்த பத்து நாட்களுக்கு எஸ்.ஐ.ஆர் பணிக்கான அவகாசத்தை நீடித்து வழங்க வேண்டும். குறிப்பாக வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களை கிராம பஞ்சாயத்து மற்றும் தாலுகா அலுவலகங்களில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். அதேப்போன்று போதிய அதிகாரிகளை எஸ்.ஐ.ஆர் பணிக்கு மாநில அரசு வழங்க வேண்டும்.

குறிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு காவல்துறை தலைவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தாலுகா அலுவலகங்களில் ஆவணங்களை அதிகாரிகள் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்ட தலைமை நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இதில் தமிழ்நாட்டில் வாக்காளர் பெயர்களை சேர்க்கும் விவகாரத்தில் இன்றுடன் கடைசி என்று முன்னதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related Stories: