புதுடெல்லி: ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ஐ நேற்று வெளியிட்டது. இந்த புதிய விதிகளின்படி, 20,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட நிறுவனங்கள், ஒரு நாளைக்கு 40,000 லிட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட தண்ணீரை பயன்படுத்தும் நிறுவனங்கள், ஒரு நாளைக்கு 100 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட திடக்கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய, மாநில அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள் என்ற பிரிவின் கீழ் வருகின்றன.
இத்தகைய நிறுவனங்கள், தாங்கள் உருவாக்கும் கழிவுகளை, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் சேகரித்து, கொண்டு செல்லப்பட்டு, பதப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கழிவுகளை ஈரக்கழிவுகள், உலர் கழிவுகள், மருத்துவ கழிவுகள், சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய கழிவுகள் என 4 வகையாக தரம் பிரித்து வழங்க வேண்டும். இந்த கொள்கையின் அடிப்படையில் அபராதம் விதிக்க இந்த விதிகள் வழிவகை செய்கின்றன. இந்த விதிகள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று தெரிவித்துள்ளார்.
